
செப்பாங், அக்டோபர்-9,
சிலாங்கூரில் உள்ள ஒரு பொதுப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் X தளத்தில் ஆபாச வீடியோவை பகிர்ந்த குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்தாண்டு மார்ச் 1-ஆம் தேதி ஷா ஆலாமில் உள்ள அவரது இல்லத்தில் அக்குற்றத்தைப் புரிந்ததாகவும், அந்த வீடியோ அதே ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதி கோலாலாம்பூரில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதிகபட்சம் ஓராண்டு சிறையும் 50,000 ரிங்கிட் அபராதமும் விதிக்க வகை செய்யும் 1998-ஆம் ஆண்டு மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு மனம் திருந்தியதாகவும், இதற்கு முன் குற்றப் பதிவு எதுவும் அவருக்கு இல்லையென்பதையும் கருத்தில் கொண்டு, நீதிமன்றம் குறைந்தபட்ச தண்டனை விதிக்க அவரின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
கடைசியில் 10,000 ரிங்கிட் அபராதம் அல்லது 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.