‘ஆம்புலன்சை’ தடுத்து ‘சூப்பர்மேன்’ பாணியில் மோட்டார் ஓட்டிய 5 மாணவர்கள் கைது

கோலா கங்சார், அக்டோபர் -29 ,
ஒரு வாரத்திற்கு முன்பாக, PLUS நெடுஞ்சாலையில் ஆம்புலன்சின் (Ambulance) பாதையை தடுத்து, ‘சூப்பர்மேன்’ பாணியில் மோட்டார் சைக்கிளை ஆபத்தான முறையில் ஓட்டிய ஐந்து பள்ளி மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
17 வயதுடைய இந்த மாணவர்கள் மேல் விசாரணைக்காக காவல் நிலையத்தில் தடுப்பு காவலில் வைப்பதற்கு கோலா கங்சார் நீதிமன்றம் இன்று உத்தரவு வழங்கியுள்ளதென்று பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிஷாம் நோர்டின் (Datuk Noor Hisam Nordin) தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் 19 ஆம் தேதியன்று ஆம்புலன்ஸ் ஒன்று விபத்து ஏற்பட்ட இடத்தை நோக்கி விரைந்துச் சென்று கொண்டிருந்தபோது, அந்த இளைஞர்கள் அதன் பாதையை மறித்து ஆபத்தான சாகசம் செய்ததாக அறியப்பட்டது..
பேராக் காவல்துறையின் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், அந்த ஐந்து சந்தேகநபர்களும் பினாங்கு புக்கிட் மெர்தாஜாம் பகுதியில் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர்களின் மோட்டார் சைக்கிள்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் தெரியப்பட்டது.
இந்நிலையில் சாலைப் போக்குவரத்து சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்ட இந்த வழக்கு மேல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.



