
ஆயர் தாவார் , ஜன 6 – பேரா மாநிலத்தில் ஆயர் தாவார் நகருக்கு அருகேயுள்ள 100 ஆண்டு கால வரலாற்று பெருமை வாய்ந்த ஆயர் தாவார் தோட்ட தமிழ்ப்பள்ளியில் இன்று காலை மணி 11.30 அளவில் ஏற்பட்ட தீ விபத்தில் அப்பள்ளி 80 விழுக்காடு அழிந்தது.
சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 25 நிமிடங்கள் போராடிய பின் தீயை முழுமையாக கட்டுப்படுத்தினர்.
இந்த தீவிபத்தில் அப்பள்ளியில் பயின்றுவரும் 40 மாணவர்கள் , தலைமையாசிரியர் மற்றும் 10 ஆசிரியர்கள் எவரும் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை.
ஆறு வகுப்புக்களை கொண்ட இந்த பள்ளியில் முதலில் தலைமையாசிரியர் அறையிலிருந்து பரவிய தீயினால் மிகவும் வேகமாக மூன்று வகுப்பறைகள் , ஆசிரியர் அறை மற்றும் சிற்றுண்டி மையமும் முழுமையாக அழிந்ததாக சம்பவம் நிகழ்ந்தபோது அங்கு இருந்த பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் Nge Koh Ham அவர்களின் இந்தியர் நலன் பிரிவு சிறப்பு அதிகாரி தினகரன் கோவிந்தசாமி வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
தீவிபத்தின்போது தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாக தொடர்பு கிடைக்காததால் ஆயர் தாவார் போலீஸ் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு அவர்கள் மூலமாக தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த தீ விபத்தினால் பள்ளிக்கு அருகே கட்டப்பட்ட புதிய கட்டிடப் பகுதிக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.