
ஜோர்ஜ் டவுன், ஏப்-3-பினாங்கில் வட செபெராங் பிறை பகுதியில், நகை விநியோகிப்பாளரிடம் பாராங் கத்தியைக் கொண்டு குறிவைத்து நடத்தப்பட்ட கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என நம்பப்படும், இரண்டு இந்தோனேசியப் பெண்கள் உட்பட ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.
மார்ச் 26 ஆம்தேதி தொடங்கி நேற்றுவரை மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் 23 முதல் 43 வயதுடைய அனைத்து சந்தேகப் பேர்வழிகளும் கைது செய்யப்பட்டதாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸி இஸ்மாயில் ( Azizee Ismai) தெரிவித்தார்.
மாவட்ட குற்றப்புலனாய்வுத் துறையின் ஒத்துழைப்போடு பினாங்கு குற்றப் புலனாய்வுத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
சுமார் 4.3 கிலோகிராம் எடையுள்ள நகைகள், ஒரு பாராங் கத்தி , அலாய் ரிம்கள் கொண்ட நான்கு டயர்கள், மூன்று மோதிரங்கள் மற்றும் குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இரண்டு கார்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பினாங்கைச் சுற்றியுள்ள தங்கக் கடைகளில், விநியோகத்திற்காகவோ அல்லது பரிவர்த்தனைகளுக்காகவோ நகைகளைக் கொண்டு வந்த விற்பனையாளர்களை சந்தேக நபர்கள் குறிவைத்துள்ளனர் என்று தொடக்கக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.



