
கோலாலாம்பூர், ஜனவரி-8 – ஆர்.ஓ.எஸ். பதிவு இல்லாமல் பத்துமலை திருத்தலத்தில் மின் படிகட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பா ராய்டு திட்டவட்டமாக தெரிவித்தார்.
பத்துமலையில் மின் படிகட்டு நிர்மாணிப்பு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக தமது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்த பாப்பா ராய்டு மின் படிகட்டு திட்டம் ஒரு அமைப்பு அல்லது இயக்கத்தின் பேரிலேயே விண்ணப்பித்திருந்தால் அது தற்போது அங்கீகரிக்கப்பட்டிருக்கும்.
ஆனால் இத்திட்டம் தனிநபரின் பேரில் விண்ணப்பம் செய்துள்ளதால் மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் இது நிராகரிக்கப்பட்டதாகவும் மாநில சட்டதிட்டங்களுக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பத்துமலையில் மின் படிகட்டு நிர்மாணிக்க வேண்டும் என்றால் பத்துமலை நிர்வாகம் சங்கங்களின் பதிவிலாகாவில் பதிந்து பின்னர் முறையாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் இது சாத்தியமாகும் பட்சத்தில் மின் படிகட்டு அமைக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கு மாநில அரசாங்கத்திற்கு எந்த தடையும் இல்லை என்று அவர் கூறினார்.
மின் படிகட்டு அமைப்பதற்கு அனுமதி வழங்க தமது தரப்பு தயாராக இருப்பதாகவும் எனினும் பத்துமலை நிர்வாகம் மின் படிகட்டு அமைப்பது தொடர்பாக மாநில அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று பாப்பா ராய்டு கேட்டுக் கொண்டார்.
இதனிடையே பத்துமலை திருத்தலத்தில் மின் படிகட்டு தொடர்பான சர்ச்சையில் பத்துமலை ஆலய நிர்வாகம் இழப்பீடு கேட்டு தமக்கு வழக்கறிஞர் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் எனினும் இதனை தமது தரப்பின் வழக்கறிஞர் குழு பதில் நடவடிக்கை எடுக்கும் என்று பாப்பா ராய்டு தெரிவித்தார்.



