
பேராக், ஜூலை 25 – அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மாநிலத்தின் நதி நீரில் அன்னிய மீன் இனங்களை முழுவதுமாக அகற்றும் இலக்கை முன்வைத்து பேராக் மீன்வளத் துறை செயற்பட்டு வருகின்றது.
இருப்பினும், பூர்வீகமற்ற மீன் இனங்கள் நீண்ட காலமாக பொது நீர்நிலைகளில், குறிப்பாக பேராக்கில் இருப்பதால், இது எளிதான காரியமல்ல என்று பேராக் மீன்வள இயக்குநர் முகமட் கசாலி அப்துல் மனாப் கூறியுள்ளார்.
இந்த இலக்கை அடைய, அன்னிய மீன்களின் தாக்கம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் உட்பட பல்வேறு முயற்சிகளும் நடவடிக்கைகளும் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பேராக்கில் அன்னிய மீன் வேட்டை நடவடிக்கைகளை நடத்துவதில் ஆர்வமுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உட்பட எந்தவொரு தரப்பினரும் முதலில் துறையிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்படுவதையும், அப்பகுதியில் வசிக்கும் பூர்வீக மீன் இனங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதையும் உறுதி செய்யும் என்று ஏர்விக்கப்பட்டுள்ளது.