
கோலாலம்பூர், ஜூன் 11 – மலாக்காவில் பதிவு செய்யப்படாத பல் கிளினிக் நடத்திவந்ததோடு , கடந்த ஆண்டு முதல் சட்டவிரோதமாக பல் மருத்துவம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர் இன்று மலாக்கா செசன்ஸ் நீதிமன்றத்தில் ஒரு பெண் கண்ணீர் விட்டார்.
நீதிபதி ஹதேரியா சிரி ( Haderiah Siri ) முன்னிலையில் இரண்டு குற்றச்சாட்டுகளும் வாசிக்கப்பட்டபோது, 26 வயதான நூர் ஷபிகா ரசாலி ( Nur Shafikah Razali ) அதனை மறுத்தார்.
தனியார் சுகாதார வசதிகள் மற்றும் சேவைகள் சட்டம் 1998 இன் பிரிவு 27 இன் கீழ் பதிவு செய்யப்படாத தனியார் பல் மருத்துவ கிளினிக் திறந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது . கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதியன்று இரவு மணி 8.25 மணிக்கு Melaka Tengah, Jalan Seri Duyong கிலுள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக Nur Shafikah மீது குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும் 2018 ஆம் ஆண்டின் பல் மருத்துவச் சட்டத்தின் 62ஆவது பிரிவு (1) இன் கீழ் , பதிவு செய்யாமல் பல் மருத்துவம் செய்ததற்காகவும், அதே சட்டத்தின் பிரிவு 62(3) இன் கீழ், அவர் மீது இரண்டாவது குற்றஞ்சாட்டப்பட்டது. அவருக்கு 4,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டதோடு இந்த வழக்கு மீண்டும் ஜூன் 23ஆம்தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும் .