
கோலாலம்பூர், ஏப்ரல்-7- நாட்டில் கோயில்களைப் பதிவதை எளிமைப்படுத்தவும் டிஜிட்டல் மயமாக்கவும் ஏதுவாக ஓர் இந்து கோயில் டிஜிட்டல் பதிவு முறையை உருவாக்குமாறு மலேசிய இந்து சங்கம் பரிந்துரைத்துள்ளது.
நேற்று காலை நடைபெற்ற town hall அவசரக் கூட்டத்திற்குப் பிறகு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு அனுப்பிய மகஜரில் முன்மொழியப்பட்டுள்ள தீர்வுகளில் அதுவும் ஒன்றாகும்.
பதிவுசெய்யப்பட்ட கோயில்கள் குறித்த அத்தியாவசிய தரவுகளின் மையப்படுத்தப்பட்ட சேகரிப்பை இந்த உத்தேச பதிவு முறை உறுதிச் செய்யும் என இந்து சங்கச் செயலாளர் எஸ். விநாயகமூர்த்தி கூறினார்.
பிரதமருக்கான மகஜரில், நாடு முழுவதும் உள்ள இந்து கோயில் நிர்வாகங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு குறைகளையும் அவற்றின் சாத்தியமான தீர்வுகளையும் இந்து சங்கம் கோடிட்டுக் காட்டியது.
அவ்வகையில் நிர்வாக மற்றும் பதிவு விஷயங்களையும், உள் கோயில் விவகாரங்களையும் மேற்பார்வையிட இந்து கோயில் ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.அவ்வமைப்புக்கு, மற்ற முன்னணி இந்து அமைப்புகளுடன் இணைந்து இந்து சங்கம் தலைமையேற்கும்.
ஆலய நிர்வாகத்தின் பெருவாரியான உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளாத வரை, எந்தவொரு கோயிலின் நிர்வாகத்தையும் அந்த உத்தேச அமைப்பு ஏற்றுக் கொள்ளாது.அனைத்து மலேசிய மக்களின் உரிமையைப் பேணுவதில் மடானி அரசாங்கம் காட்டும் கடப்பாட்டை இந்து சங்கமும் கூட்டத்தில் பங்கேற்றவர்களும் உறுதியாக நம்புகின்றன.
எனவே, இந்து ஆலயங்களின் ஒழுங்குமுறை அமைப்பு மற்றும் டிஜிட்டல் பதிவு முறையை ஏற்படுத்தும் பரிந்துரையை, அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து நல்லதொரு முடிவை எடுக்கும் என எதிர்பார்ப்பதாக விநாயகமூர்த்தி கூறினார்.
துல்லியமான தரவுகளுடன் மட்டுமே கோயில்களும் அவற்றின் நிர்வாகங்களும் எதிர்கொள்ளும் சவால்களுக்கு சரியான மற்றும் பயனுள்ள தீர்வுகளை அடையாளம் காணத் தொடங்க முடியும்.
மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய இடமாற்ற சர்ச்சை போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்க இந்நடவடிக்கை அவசியமாகும்.
“கோயில் நிர்வாகங்களிடமிருந்து தரவுகளை நாங்கள் சேகரித்துள்ளோம், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அதில் பகிர்ந்து கொண்டனர்,” என நாடு முழுவதும் உள்ள கோயில் நிர்வாகங்கள் கலந்து கொண்ட 7 மணி நேர கூட்டத்திற்குப் பிறகு அவர் சொன்னார்.
இவ்வேளையில், நிலப் பிரச்னையும் நிர்வாகப் பிரச்னையுமே நாட்டிலுள்ள இந்து ஆலயங்களின் இரு முக்கியப் பிரச்னைகள் என்ற கருத்து நேற்றையக் கூட்டத்தில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நில விவகாரம் மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் வருவதால், அப்பிரச்னையை எப்படி கையாள்வது என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக, இந்து சங்கத் தலைவர் தங்க கணேசன் கூறினார்.
800-கும் மேற்பட்டோர் பங்கேற்ற அக்கூட்டத்திற்கு தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, பிரதமரின் சிறப்பு விவகாரங்களுக்கான அதிகாரி ஷண்முகம் மூக்கன் உள்ளிட்டோரும் சிறப்பு வருகைப் புரிந்திருந்தனர்.
ஷண்முகத்திடம் அந்த மகஜர் ஒப்படைக்கப்பட்டது.