
கோலாலம்பூர், ஏப்ரல்-17, கோயில் பிரச்சனைகளை அவற்றின் நிர்வாகங்கள் மக்கள் பிரதிநிதிகளிடமே கொண்டுச் செல்ல வேண்டும்.
அந்தந்தத் தொகுதியில் உள்ள சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாகவே அப்பிரச்னைகளுக்கு உரியத் தீர்வு காண முடியுமென, மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ என்.சிவகுமார் ஆலோசனைக் கூறியுள்ளார்.
நாடளாவிய நிலையில் தாம் மேற்கொண்டு வரும் road tour சந்திப்புகளில், கோயில் பிரச்னைகளை அரசு சார்பற்ற இந்து அமைப்புகளால் தீர்க்க முடியவில்லை என பரவலாகக் புகார்கள் கூறப்படுகின்றன.
எனினும், மக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.
NGO-கள் நம்மைப் போன்ற சாதாரண மக்கள் தான்; அவர்கள் கையில் அதிகாரம் கிடையாது.
பிரச்னைகளுக்கு நமக்காக அவர்கள் குரல் கொடுக்கவும் போராடவும் முடியுமே தவிர, தீர்வை ஏற்படுத்தும் அதிகாரம் இல்லை.
எனவே, மக்கள் பிரதிநிதிகளைத் தாம் நாம் நாடிச் செல்ல வேண்டும்.
இந்த அரசியல்வாதிகளுக்குத் தான், மாவட்ட நில ஆட்சியர், அரசாங்க அலுவலகங்கள், ஆட்சிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோருடன் நேரடி தொடர்பு உள்ளது.
இதன் மூலம் பிரச்னைகளுக்கு அவர்கள் விரைந்து தீர்வு காண முடியும்.
அதே சமயம், பிரச்னை குறித்து முறையிடும் முன்னர், ஆலய நிலம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பதிவுப் பத்திரங்களும் இருப்பதை நிர்வாகத்தினர் உறுதிச் செய்துகொள்ள வேண்டும்.
இல்லையென்றால், அவர்களுக்கு உதவுவதும் கடினமாகி விடுமென, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான அறங்காவலருமான டத்தோ சிவகுமார் நினைவுறுத்தினார்.
எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தும், மக்கள் பிரதிநிதிகள் பாராமுகம் காட்டினால், தேர்தல் வரும் போது அவர்களைப் ‘பார்த்துக்’ கொள்ளலாம் என்றார் அவர்.