
மும்பை, அக்டோபர்-3 – தனது குரலை AI அதிநவீனத் தொழில்நுட்பம் மூலம் மறு உருவாக்கம் செய்து பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, இந்தியத் திரையுலகின் பண்பட்ட பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தொடுத்த வழக்கில், மும்பை உயர் நீதிமன்றம் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
AI மூலம் தனது குரல் உருவாக்கப்பட்டு விற்கப்படுவதாகக் குற்றம்சாட்டி ஆஷா போஸ்லே அவ்வழக்கைத் தொடுத்திருந்தார்.
AI-யின் தவறான பயன்பாடு, பல ஆண்டுகளாக தாம் கடினமாக உழைத்து உருவாக்கிய நற்பெயரைக் கெடுத்து விடுமென்ற கடுமையான கவலையை அவர் அதில் சுட்டிக் காட்டினார்.
அதனை விசாரித்த நீதிமன்றம், ஆஷா போஸ்லேவின் குரல், பாணி, பேச்சு, மற்றும் அவரது புகைப்படங்களைப் பயன்படுத்தி AI மூலம் மறு உருவாக்கம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.
மறைந்த இசை சகாப்தம் லதா மங்கேஷ்கரின் இளைய சகோதரியுமான 92 வயது ஆஷா போஸ்லே, 80 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இந்திய மொழி திரைப்படங்களில் பாடியுள்ளார்;
தமிழில் இவர் பாடியவற்றில் ‘செண்பகமே செண்பகமே’, ’Oh Butterfly’, ‘செப்டம்பர் மாதம்’ போன்றவை மிகவும் புகழ்பெற்ற பாடல்களாகும்.
2 தேசிய திரைப்பட விருதுகள், 18 மகாராஷ்ட்ரா மாநில விருதுகள், சிறந்த பின்னணி பாடகிக்கான 7 பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை வென்று வாழும் சகாப்தமாக ஆஷா போஸ்லே வலம் வருகிறார்.