
அண்டார்டிக்கா, ஜனவரி 26 – அண்மையில் சமூக ஊடகங்களில் penguin ஒன்று தனது கூட்டத்தை விட்டு விட்டு தனியாக பனிமலைகளை நோக்கி நடந்து செல்லும் காணொளி வைரலாகி வருகின்றது. அக்காணொளிக்கு பலரும் பலவிதமான பின்னணி இசைகளை ஒலியேற்றி மாறுபட்ட கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அந்த வீடியோ, ஒரு சோக ‘மீம்’ அல்ல மாறாக அது இயற்கையின் அரிய தவறு என்று அறிவியலாளர்கள் கருத்துரைத்து வருகின்றனர். கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குநர் Werner Herzog பதிவு செய்த காட்சியில், ஒரு Adelie பென்குயின் உணவும் பாதுகாப்பும் நிறைந்த கடலை விட்டு, அண்டார்டிக்காவின் பனிமலைகளை நோக்கி தனியாக நடக்கிறது.
பென்குயின்கள் சூரியன் மற்றும் பூமியின் காந்தப் புலத்தைப் பயன்படுத்தி திசை அறியும் நிபுணர்கள் என்கின்றார்கள் விஞ்சானிகள். ஆனால், சில அரிய நேரங்களில் அவற்றின் உள்ளக “GPS” முற்றிலும் செயலிழக்கிறது. அப்போது அவை 80 கிலோமீட்டருக்கும் மேல் தவறான பாதையில் சென்று, –50 செல்சியசுக்கும் கீழான கடும் குளிரில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உருவாகிறது.
உடல்நலக் கோளாறுகள் மற்றும் மாறும் காலநிலையும் இந்த குழப்பத்தை அதிகரிக்கலாம். இந்த வீடியோ, இயற்கை எப்போதும் சரியான முடிவுகளை எடுப்பதில்லை என்பதைக் காட்டும் சோகமான நினைவூட்டல் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.



