இணைய முதலீட்டு மோசடியில் RM604,000 பணத்தை இழந்த பினாங்கு ஆசிரியை

ஜோர்ஜ்டவுன், நவம்பர் 22-பினாங்கில், சூதாட்ட இயந்திர மாதிரியிலான இணைய முதலீட்டுத் திட்டத்தை உண்மையென நம்பி, RM604,000 பணத்தை இழந்துள்ளார் 57 வயது ஆசிரியை ஒருவர்.
முதலீட்டு முகவர் எனக் கூறிக் கொண்ட ஓர் ஆடவரால் வாட்சப் குழுவில் சேர்க்கப்பட்ட அம்மாதுவுக்கு, அதிக இலாபம் கிடைக்கும் என ஆசை காட்டப்பட்டுள்ளது.
அதாவது, முதலீடு செய்த ஒரே மாதத்தில் போட்ட பணத்தைப் பொருத்து 350% வரை இலாபம் கொட்டும் என தெரிவிக்கப்பட்டதாம்.
அது உண்மையா பொய்யா என எதனையும் சரியாக ஆராயாத அந்த ஆசிரியை, 5 வெவ்வேறு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளுக்கு 20 தடவையாக மொத்தமாக RM 604,000 பணத்தை மாற்றியுள்ளார்.
பின்னர் தமக்கு வரவேண்டிய RM1.8 மில்லியன் இலாபத்தை எடுக்க முடியாமல் போன போதே, தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார்.
இதையடுத்து பாராட் டாயா போலீஸ் நிலையத்தில் அவர் புகாரளிக்க, தற்போது குற்றவியல் சட்டம் 420-ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடைபெறுகிறது.



