
கோலாலம்பூர், பிப் 14 – ஊழலை எதிர்ப்பதில் கியூபெக்ஸ்ஸின் (Cuepacs) தவறான நிலைப்பாடு தொடர்பில் அந்த தொழிசங்கத்தின் பொதுச் செயலாளர் அப்துல் ரஹ்மான் நோர்டின் (Abdul Rahman Nordin) வெளியிட்ட அறிக்கை ஏமாற்றத்தை தருவதாக பினாங்கு மாநில முன்னாள் துணை முதலமைச்சரும் உரிமை கட்சியின் தலைவருமான பேராசிரியர் டாக்டர் ராமசாமி சாடினார்.
அரசு ஊழியர்கள், பொதுவாக சட்டத்தை மதிக்கும் குடிமக்கள், தங்கள் பிழைப்புக்கு பயந்து லஞ்சம் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று அவர் வலியுறுத்தியிருப்பதோடு , லஞ்சம் வாங்குபவர்களை விட , லஞ்சம் கொடுப்பவர்கள் சமுதாயத்திற்கு ஆபத்தானவர்கள் என்று அப்துல் ரஹ்மான் கூறியிருப்பது ஏற்புடையதாக இல்லையென ராமசாமி சுட்டிக்காட்டினார்.
பெரும்பாலான நாடுகளில் உள்ள தொழிற்சங்கங்கள் ஊழலை எதிர்த்துப் போராடுவதில் முன்னணியில் இருக்கும்போது, அப்துல் ரஹ்மானின் ஊழலை நிராகரிக்குமாறு அரசு ஊழியர்களை வற்புறுத்துவதற்குப் பதிலாக, அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களால் அவர்கள் லஞ்சம் வாங்குவதை நியாயப்படுத்துகிறார்.
இந்த நியாயம் தவறானது என்பதோடு அரசாங்க ஊழியர்கள் அச்சுறுத்தல் அல்லது தோட்டாக்கள் போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொண்டால் உடனடியாக போலீசில் புகார் செய்ய வேண்டும்.
ஊழலில் ஈடுபடுவதற்கு பயத்தை மட்டும் தற்காப்பாகப் பயன்படுத்த முடியாது. அப்துல் ரஹ்மானின் நிலைப்பாடு மலேசியாவின் சட்ட அமலாக்க அமைப்பை குறைத்து மதிப்பிடுவதோடு , நாட்டை ஒழுங்கற்றதாக சித்தரிக்கிறது.
ஒரு மூத்த தொழிற்சங்கப் பிரமுகராக, ஊழல் குறித்த அப்துல் ரஹ்மானின் குறுகிய பார்வை, அதன் CPI தரவரிசையை மேம்படுத்துவதில் மலேசியாவின் முன்னேற்றத்தைத் தடுக்கலாம்.
அவரைப் போன்ற தலைவர்கள் நேர்மையை நிலைநாட்ட வேண்டும், ஊழலுக்கு சாக்குபோக்கு சொல்லக்கூடாது என ராமசாமி தெரிவித்தார்.