
கோலாலம்பூர், டிசம்பர்-13 – மலாக்கா போலீஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், சாட்சிகளின் குற்றப் பதிவுகள் தொடர்பற்றவை என, கொல்லப்பட்ட மூவரின் குடும்பங்கள் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் ஒருவர் கூறுகிறார்.
சாட்சியின் பழையக் குற்றப்பதிவுகள், அவரின் இன்றைய சாட்சியத்தின் நம்பகத்தன்மையை பாதிக்காது.
அவர் கூறும் நிகழ்வின் உண்மைத் தன்மை மட்டுமே இங்கு முக்கியம் என ராஜேஷ் நாகராஜன் தெரிவித்தார்.
போலீஸ் நடவடிக்கையின் சட்டப்பூர்வத்தன்மை தான் விசாரணையின் மையப்புள்ளளியே தவிர சாட்சியின் பின்னணி அல்ல என்றார் அவர்.
டுரியான் துங்காலில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவரது மனைவி என பெண்ணொருவர் கூறியுள்ளது உண்மையல்ல என மலாக்கா போலீஸ் தலைவர் Dzulkhairi Mukhtar முன்னதாகக் கூறியிருந்தார்.
சம்பவத்தின் போது உரையாடலைப் பதிவுச் செய்த அப்பெண், உண்மையில் அவ்வாடவருடன் தொடர்பில் இருந்து 3 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தவர் மட்டுமே; அதோடு 2012 முதல் அப்பெண்ணுக்கே 10 கிரிமினல் குற்றப்பதிவுகள் இருப்பதாக Dzulkhairi அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
அதனை சாடிய ராஜேஷ், அப்பெண் முறைப்படி திருமணம் செய்தாரா அல்லது குற்றப்பதிவுகளை வைத்துள்ளாரா என்பதெல்லாம், மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்குத் தொடர்பில்லாதவை என்றார்.
எனவே இப்படி சாட்சியின் குற்றப் பதிவுகளை முன்னிறுத்துவது, வழக்கின் உண்மையான கேள்விகளை மறைக்கக்கூடும் என அவர் நினைவூட்டினார்.



