இந்தியாவுக்கான விசா விதிமுறைகளில் தளர்வு இல்லை; பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் திட்டவட்டம்

லண்டன், அக்டோபர்-8,
இந்தியாவுக்கான விசா அனுமதிகளில் தளர்வு வழங்கும் திட்டமேதும் தற்போதைக்கு இல்லையென, பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் (Keir Starmer) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
2-நாள் அலுவல் பயணமாக புது டெல்லி செல்லும் முன் அவர் அதனைத் தெரிவித்திருப்பது இந்திய அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
குறிப்பாக, இந்தியத் தொழிலாளர்கள் அல்லது மாணவர்களுக்கு புதிய விசா வழித்தடங்களைத் திறக்க எந்தத் திட்டமும் இல்லை.
எனவே, தமது இந்தியப் பயணத்தின் நோக்கம் வணிக மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களை வலுப்படுத்துவது தானே ஒழிய, குடிநுழைவுக் கொள்கைகளில் மாற்றம் செய்வதல்ல என்றார் அவர்.
ஸ்டார்மர் தலைமையிலான குழுவில் 100-க்கும் மேற்பட்ட தொழில் மற்றும் கல்வித் தலைவர்கள் இணைந்துள்ளனர்.
ஜூலை மாதத்தில் கையெழுத்தான இந்தியா–பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்தின் பலன்களை முன்னெடுக்கவே இப்பயணம் நடைபெறுகிறது.
அவ்வொப்பந்தம் மூலம் பிரிட்டன் கார்கள் மற்றும் விஸ்கி மதுபானங்கள் இந்தியாவில் மலிவாகவும், இந்திய நெசவுப் பொருட்களும் நகைகளும் பிரிட்டனில் மலிவாகவும் கிடைக்கும்.
பிரிட்டன் உலகின் “சிறந்த திறமைகளை” ஈர்க்க விரும்புகிறது என்றாலும், இந்தியாவுக்கான விசா கொள்கை மாற்றமின்றி தொடரும் என ஸ்டார்மர் கூறினார்.
என்ற போதிலும், புது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு ஸ்டார்மரின் முடிவில் மாற்றம் வரக்கூடும் என்றும் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.