புது டெல்லி, அக்டோபர்-9 – 70-வது இந்திய தேசியத் திரைப்பட விருதளிப்பு விழா நேற்று தலைநகர் புது டெல்லியில் நடைபெற்றது.
அதில் 2022-ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகளை, இந்திய அதிபர் திரௌபதி முர்மு எடுத்து வழங்கினார்.
சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருதை பொன்னியின் செல்வம் பாகம் 1-ன் இயக்குநர் மணிரத்னமும் தயாரிப்பாளர் சுபாஸ்கரனும் பெற்றுக் கொண்டனர்.
அதே படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது இசையமைப்பாளர் ஏ.ஆ.ரகுமானுக்கு வழங்கப்பட்டது.
இது அவரின் ஏழாவது தேசிய விருதாகும்.
பொன்னியின் செல்வன் -1 படத்தின் மூலம் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது ரவி வர்மனுக்கும், சிறந்த ஒலி அமைப்புக்கான தேசிய விருது ஆனந்த் கிருஷ்ண மூர்த்திக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த நடிகைக்கான விருதை தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்திற்காக நித்யா மேனன் பெற்றார்.
அப்படத்தின் நடன இயக்குநர் சதீஷுக்கு சிறந்த நடன இயக்கத்துக்கான விருது வழங்கப்பட்டது.
சதீஷுடன் விருது அறிவிக்கப்பட்டிருந்த நடன இயக்குநர் ஜானி பாலியல் புகாரில் சிக்கியதால் அவருக்கான விருது இரத்துச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை காந்தாரா படத்திற்காக கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி பெற்றுக் கொண்டார்.