
மும்பை, ஏப்ரல்-13-இந்திய திரையிசை உலகில் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாக, 8 தசாப்தங்களாகத் தனது குரலால் கோடிக்கணக்கான இரசிகர்களைக் கட்டிப்போட்ட ‘இசைக்குயில்’ ஆஷா போஸ்லே, மும்பையில் நேற்று காலமானார்.
அவருக்கு வயது 92.
மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில், வயது மூப்பு மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 12,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி, கின்னஸ் சாதனை படைத்தவர் ஆஷா போஸ்லே என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் சில பாடல்களை மட்டுமே இவர் பாடியிருந்தாலும், அனைத்துமே ‘சூப்பர் ஹிட்’ பாடல்களாகும்.
செண்பகமே செண்பகமே, Oh Butterfly, செப்டம்பர் மாதம், கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் உள்ளிட்டவை அவற்றிலடங்கும்.
ஆஷா போஸ்லேவின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
தனது மூத்த சகோதரி லதா மங்கேஷ்கரின் மறைவுக்குப் பிறகு, இந்திய இசையின் கடைசித் தூணாகக் கருதப்பட்ட ஆஷாவின் மறைவு, ஒட்டுமொத்த இசை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்று மும்பை சிவாஜி பூங்காவில் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.
ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தாலும், இந்த ‘கானக் குயில்’ விட்டுச் சென்ற பாடல்கள் என்றும் மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்….



