
கோலாலம்பூர், ஜனவரி-23-வரும் பிப்ரவரி 1, ஞாயிற்றுக் கிழமையன்று கூட்டரசு பிரதேச தினம் மற்றும் தைப்பூசம் இரண்டும் ஒரே நாளில் வருவதால், அவற்றின் மாற்று விடுமுறைகள் குறித்து பலருக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதைத் தவிர்க்க, அரசாங்க ஊழியர்கள் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கைகளை மட்டுமே பின்பற்ற வேண்டுமென, அரசு ஊழியர்களின் தொழிற்சங்க காங்கிரஸான கியூபெக்ஸ் அறிவுறுத்தியுள்ளது.
கூட்டரசு பிரதேசத்தில், இரு தினங்களும் அதிகாரப்பூர்வ பொதுவிடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவை ஞாயிற்றுக்கிழமை வருவதால் மாற்று விடுமுறைகள் வழங்கப்பட வேண்டும்.
அவ்வகையில், அரசு ஊழியர்களுக்கு பிப்ரவரி 2, திங்கட்கிழமை மாற்று விடுமுறை வழங்கப்படுகிறது.
ஆனால், தைப்பூசத்திற்கு விடுமுறையை அனுசரிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு, பிப்ரவரி 3, செவ்வாய்க்கிழமையும் மாற்று நாளாக கணக்கிடப்படுகிறது.
இதுவே அந்நிறுவனத்திற்கு தைப்பூசம் ஒரு optional holiday அதாவது தேர்வு விடுப்பே என்றால், ஊழியரின் ஒப்புதலுடன் மாற்று நாள் வேறு நாளாக வழங்குவதற்கும் வாய்ப்பு உள்ளது.
ஆக, அரசு ஊழியர்களுக்கு ஒரு மாதிரியும், தனியார் ஊழியர்களுக்கு ஒரு மாதிரியும் மாற்று விடுமுறைகள் கிடைப்பதால், அவர்கள் குழம்பிப் போயிருப்பதாகத் தெரிகிறது.
என்றாலும், வெளியில் பரவும் தவறான தகவல்களில் நம்பிக்கை வைக்காமல், அரசாங்கம் வெளியிடும் சுற்றறிக்கைகளையே முழுமையாக பின்பற்றுமாறு கியூபெக்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது.



