Latestஉலகம்மலேசியா

இந்திய நாட்டு வணிக நிகழ்வுகளுக்கு புகழ்பெற்ற இடமாகத் திகழும் மலேசியா

புது டெல்லி, பிப்ரவரி-23 – வணிக நிகழ்வுகள் மற்றும் ஊக்கப் பயணங்களுக்கான முக்கிய இடமாக, இந்திய பெருநிறுவனங்கள் மத்தியில்  மலேசியாவின் நன்மதிப்பு கூடியுள்ளது.

இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

இதையடுத்து, இவ்வாண்டு புது டெல்லியில் நடைபெறும் தெற்காசிய பயணம் மற்றும் சுற்றுலா பரிமாற்ற (SATTE) வர்த்தக கண்காட்சியில், MICE எனப்படும் கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் பகுதிகளிலும் மலேசியா முக்கிய கவனம் செலுத்துகிறது.

மலேசியா 2024-ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் சிறந்த MICE இடமாக அங்கீகரிக்கப்பட்டது; இந்நிலையில் நிகழ்ச்சி சார் சுற்றுலாவில் தொடர்ந்து முன்னணி வகிக்கவும் ஆர்வமாக உள்ளது.

Tourism Malaysia-வின் புது டெல்லி அலுவலக இயக்குனர் Ahmad Johanif Mohd Ali அவ்வாறு கூறினார்.

MICE சுற்றுலாவுக்கு உள்ளூர் நிறுவனங்கள் சலுகைகள் தருவதால், அனைத்துலக மாநாடுகள், பெருநிறுவன நிகழ்வுகள் மற்றும் ஊக்குவிப்புப் பயணங்களுக்கான சிறந்த தேர்வாக மலேசியா திகழ்கிறது என்றார் அவர்.

இவ்வாண்டு இந்தியாவில் மேற்கொள்ளப்படும் மலேசியாவின் சுற்றுலா ஊக்குவிப்பு பிரச்சாரங்கள், ஷாப்பிங், கேளிக்கைப் பூங்காக்கள், குடும்ப விடுமுறைகள் மற்றும் தேனிலவு பேக்கேஜ்களில் ஆர்வமுள்ள பயணிகளை ஈர்ப்பதிலும் கவனம் செலுத்துகின்றன.

முந்தைய ஆண்டைக் காட்டிலும் கடந்தாண்டு இந்தியாவிலிருந்து வந்த சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை 72 விழுக்காடாக அதிகரித்து 1.13 மில்லியனாகப் பதிவாகியது.

இந்தியப் பயணிகளுக்கான 30 நாள் விசா விலக்கு கொள்கையை 2026 டிசம்பர் 31 வரை அரசாங்கம் நீட்டித்துள்ளதும் சுற்றுலா துறைக்கு பெரும் ஊக்குவிப்பாக உள்ளது.

முன்பெல்லாம், ஒரு சராசரி இந்தியப் பயணி தனது மலேசிய வருகை குறித்து முடிவு செய்ய சுமார் 60 நாட்கள் ஆனது, ஆனால் இப்போது முடிவு நேரம் இரண்டு வாரங்களுக்கும் குறைவாகவே உள்ளது.

இதன் விளைவாக கடைசி நிமிட முன்பதிவுகள் கணிசமாக உயருவதாக, Ahmad Johanif கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!