
செர்டாங், ஜூலை-14 -உள்நாட்டு இந்திய பாரம்பரிய இசைக் கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக, PKK Awards 2.0 எனப்படும் பாரம்பரிய இசை கலை கலாச்சார விருது விழா இரண்டாவது முறையாக நடத்தப்பட்டது.
கடந்த சனிக்கிழமை ஸ்ரீ கெம்பாங்கானில் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற அவ்விருது விழாவுக்கு, ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ. எம். சரவணன் தலைமைத் தாங்கினார்.
துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடியின் சிறப்பு அதிகாரி அர்வின் அப்பளசாமி, முன்னாள் செனட்டர் டத்தோ டி.மோகன், தொழிலதிபர் டத்தோ மாலிக், நன்கொடையாளர் இரத்னவள்ளி அம்மையார் உள்ளிட்ட பிரமுகர்களும் சிறப்பு வருகைப் புரிந்தனர்.
CR Karthik என்றழைக்கப்படும் கார்த்திகேசு லெட்சுமணன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.
உருமி மேள கலைஞர்கள், நாதஸ்வரக் கலைஞர்கள், கோலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நமது பாரம்பரிய இசை நடனக் கலைஞர்கள் என மொத்தம் 110 பேருக்கு விருதுகளோடு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
இந்திய பாரம்பரிய இசைக் கலைஞர்களை அங்கீகரித்து அவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்வாக இது அமைந்தது பெரும் மகிழ்ச்சியளிப்பதாக, டத்தோ டி.மோகன் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
பாரம்பரிய இசைக்கலைஞர்களுக்கு முகவரி தரும் மேடையாக இந்த PKK விருதளிப்பு தொடர்ந்து விளங்கி வருமென, ஏற்பாட்டாளர் கார்த்திகேசு தெரிவித்தார்.
நிகழ்வில் விருது வாங்கியவர்களில் சிலர் வணக்கம் மலேசியாவுடன் தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
1,200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில், Most Indian Cultural Performance In Gathering என்ற பிரிவில் மலேசிய சாதனைப் புத்தகத்தின் அங்கீகாரமும் வழங்கப்பட்டது சிறப்பம்சமாகும்.