Latestமலேசியா

இந்திரா காந்தியின் முன்னாள் கணவனை நாடு முழுவதும் தேடுங்கள், கிளந்தானில் மட்டுமல்ல – உயர் நீதிமன்றம் உத்தரவு

கோலாலம்பூர் நவம்பர் 22-2018-ஆம் ஆண்டு முதல் தனது இளைய மகளை முன்னாள் மனைவி எம். இந்திரா காந்தியிடம் ஒப்படைக்கத் தவறியதற்காக கைது ஆணைக்கு உட்பட்ட ரிடுவான் அப்துல்லாவைத் தேடும் பணியை, போலீஸ் நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும்.

மாறாக கிளந்தானில் மட்டுமே தேடிக் கொண்டிருக்கக் கூடாது என ஈப்போ உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது.

ஒருதலைபட்ச மதமாற்றம் மற்றும் குழந்தையை வளர்க்கும் உரிமை தொடர்பான சட்டப் போராட்டத்தில் தோல்வியடைந்த பிறகு ரிடுவான் தலைமறைவாகி விட்டார்.

இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது, எனவே இன்னும் ஆக்ககரமாக துப்புத் துலங்கி தகவல்களை அளிக்க வேண்டும் என, நீதிபதி Norsharidah Awang கட்டளையிட்டார்.

ரிடுவான் இருக்குமிடம் ‘தெரியவில்லை’ என போலீஸ் கூறிய நிலையில், அரசாங்கத்தின் BUDI95 மற்றும் SARA உதவித் திட்டங்களில் அவரின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் கண்டிப்பாக இருக்கும் என்பதால், அவற்றை வைத்து முன்னாள் கணவரைத் தேட வேண்டுமென இந்திரா காந்தி புதிய affidavit மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதனை விசாதித்த போதே நீதிபதி அவ்வாறு கூறினார்.

மானியம் பெறப்பட்ட RON95 பெட்ரோலை ரிடுவான் நிரப்பிய எண்ணெய் நிலையத்தை கண்டுபிடித்தீர்களா என நீதிபதி வினவிய போது, “விசாரித்து வருகிறோம்” என பேராக் குற்றப்புலனாய்வுத் துறையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி
Yap Siew Cheng தெரிவித்தார்.

அதோடு, ரிடுவானின் இரண்டாவது மனைவி கிளந்தானைச் சேர்ந்தவர் என்பதாலும், மகள் பிரசன்னா தீக்ஷா அங்குள்ள பள்ளியொன்றில் படிப்பதாக தகவல் கிடைத்ததாலுமே, தேடல் பணி கிளந்தானை மையமிட்டதாக அவர் நீதிமன்றத்திடம் கூறினார்.

இந்நிலையில், ரிடுவானைத் தேடும் பணிகள் தொடர்பான மேலதிகத் தகவல்களை வழங்க பிப்ரவரி 27-ஆம் தேதியை நீதிபதி நிர்ணயித்தார்.

2009-ஆம் ஆண்டு இந்திராவின் அனுமதியின்றி ரிடுவான், தங்களது 3 குழந்தைகளையும் இஸ்லாத்திற்கு மதம் மாற்றினார்.

அதோடு, குழந்தைகளை வளர்க்கும் உரிமைக்காக ஷரியா நீதிமன்றத்தையும் நாடினார்.

அதை எதிர்த்து இந்திரா காந்தி தொடுத்த வழக்கில் 2018 ஜனவரியில் அதிரடி தீர்ப்பளித்த கூட்டரசு நீதிமன்றம், அந்த மதமாற்றங்கள் செல்லாது என்றும், இளைய மகள் பிரசன்னாவை தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதற்காக ரிடுவானைக் கைதுச் செய்ய வேண்டும் என்றும் போலீஸ் தலைவருக்கு உத்தரவிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!