
கோலாலம்பூர், மார்ச்-4 – இந்துக்களின் காவடியாட்டத்தை இழிவுப்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட ஏரா மலாய் வானொலி நிலையம் அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.
வெறும் மன்னிப்போடு முடிந்துபோகும் விஷயம் இதுவல்ல என, மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையான MAHIMA-வின் தலைவர் டத்தோ என்.சிவகுமார் கூறியுள்ளார்.
இந்துக்கள் குறிப்பாக முருக பக்தர்கள் உச்சரிக்கும் ‘வேல் வேல்’ என்ற புனிதச் சொல்லை ஏளனம் செய்யும் வகையில் அவர்கள் நடந்துகொண்டுள்ளனர்.
மற்ற மதத்தவர்களின் நம்பிக்கைகள் உங்களுக்கு நகைச்சுவையா என அவர் காட்டமாகக் கேட்டார்.
இதற்காகத் தான், இனம், மதம், ஆட்சியாளர்களை நிந்திக்கும் 3R விவகாரங்களுக்குக் கடுமையான தண்டனைகள் எடுக்கப்பட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால், அதிகாரத் தரப்பு அதனை கண்டுகொள்வதாக இல்லை.
3R சம்பந்தப்பட்ட சட்டத் திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசுத்தியோன் இஸ்மாயில் கடந்தாண்டு கூறியிருந்தார்.
ஆனால், முஸ்லீம் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்ட 3R நிந்தனைச் சம்பவங்களில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
பத்து மலை முருகன் சிலை குறித்த AI அனிமேஷன் வீடியோ, அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய ‘கெலிங்’ சோள வியாபாரி விவகாரமென அனைத்தும், தக்க நடவடிக்கையிலிருந்து தப்பி விட்டன.
“கெலிங்கிற்கு சோளம் விற்பதில்லை” என அட்டை வைத்தவருக்கு வெறும் 400 ரிங்கிட் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, 1998-ஆம் ஆண்டு தொடர்பு – பல்லூடக ஆணையச் சட்டத்தின் கீழ் ஏரா அறிவிப்பாளர்களும் அந்த வானொலி நிர்வாகமும் குற்றம் சாட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; மற்றவர்களுக்கு இதுவொரு பாடமாக இருப்பது அவசியமாகும்.
மத விவகாரங்களில் இதே போல் குற்றங்களைப் புரிவோருக்கு கடும் தண்டனை விதிக்கப்பட ஏதுவாக தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு நாடாளுமன்றத்தில் பரிந்துரைக்க வேண்டுமென்றும் டத்தோ சிவகுமார் வலியுறுத்தினார்.