
கோலாலாம்பூர், ஜூலை-29- இன்னும் இரு நாட்களில் 13-ஆவது மலேசியத் திட்டம் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், பல கட்சிகளைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று முக்கியச் சந்திப்பொன்றை நடத்தினர்.
நாடாளுமன்றக் கட்டத்தில் நடைபெற்ற அக்கூட்டத்தில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கேசவன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன், செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யுனேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தியச் சமூகத்தின் அழுத்தமான பிரச்சினைகளைத் தீர்க்க இந்த ஐந்தாண்டு கால திட்டத்தில் ஒரு தீர்க்கமான திட்டவரைவு இருக்க வேண்டுமென கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக, கணபதிராவ் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
இந்திய வாக்காளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் முக்கியப் பிரச்னைகள் குறித்து பிரதமரைச் சந்தித்து கருத்துகளை வழங்க வேண்டிய அவசரத் தேவையும் உள்ளதாக அவர் சொன்னார்.
ம.இ.கா வரைந்த மலேசிய இந்தியர் பெருந்திட்டம், மற்றும் பொதுத் தேர்தல்களின் போது இந்திய வாக்கார்களுக்கு பக்காத்தான் ஹராப்பான் கொடுத்த சிறப்பு வாக்குறுதிகள் ஆகியவையும் இன்றையச் சந்திப்பில் முக்கியமான விவாதிக்கப்பட்டன.
அதே சமயம், எதிர்காலத்தில் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள, மடானி அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கணபதிராவ் வலியுறுத்தினார்.
புக்கிட் கெளுகோர் எம்.பி ராம் கர்ப்பால் சிங்கின் சிறப்பு அதிகாரி, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எம். சரவணனனின் சிறப்பு அதிகாரியும் இன்றையச் சந்திப்பில் பங்கேற்றனர்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கனும் அச்சந்திப்பில் கலந்துகொண்டார்.
வியாழக்கிழமையன்று பிரதமர் அன்வார் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான 13-ஆவது மலேசியத் திட்டத்தை மக்களவையில் தாக்கல் செய்யவிருப்பதாக அறியப்படுகிறது.