Latestமலேசியா

இன, மத வெறுப்பு பேச்சுக்கு எதிராக நடவடிக்கை கோரிக்கை; பிரதமர் அலுவலகம் முன் 200-க்கும் மேற்பட்டோர் அமைதி மறியல்

புத்ராஜெயா, மார்ச்-14 – இந்து அமைப்பினர், பொது மக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் நேற்று புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகம் முன்பு திரண்டு, நாட்டில் அதிகரித்து வரும் இன மற்றும் மத வெறுப்பு பேச்சுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் கோரிக்கை விடுத்தனர்.

Global Human Rights Federation தலைமையில் 75 அரசு சாரா அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மகஜர் ஒன்றும் சமர்ப்பித்தனர்.

சமூக ஊடகங்களில் மதங்களுக்கு இடையிலான பதற்றத்தை தூண்டும் வகையில் பேச்சுகள் வெளியிடுவோருக்கு எதிராக சட்டம் சமமாக அமுல்படுத்தப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

அந்த மகஜரில் சுயேட்சை சமய சொற்பொழிவாளர்கள் சம்ரி வினோத், ஃபிர்டாவுஸ் வோங், கல்வியாளர் ரிடுவான் தீ அப்துல்லா, சமூக ஆர்வலர் தமிம் டாஹ்ரி மற்றும் பெர்லிஸ் முஃப்தி Mohd Asri Zainul Abidin உள்ளிட்ட சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டன.

இவர்கள் தொடர்பாக பல போலீஸ் புகார்கள் அளிக்கப்பட்டிருந்தாலும், பல வழக்குகள் “மேல் நடவடிக்கை இல்லை” என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக GHRF தலைவர் S. Shashi Kumar குற்றம்சாட்டினார்.

சட்டம் சமமாக அமுல்படுத்தப்படாதது சமூகங்களுக்கிடையே நம்பிக்கையின்மையை உருவாக்கும் என்றும், நாட்டின் ஒற்றுமையை பாதிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், “pendatang”, “penumpang”, “kafir” போன்ற அவமதிப்பான சொற்கள் சில சமூகங்களை குறிவைத்து பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்த பிரச்னையை தீர்க்க பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சு, போலீஸ், சட்டத்துறை (AGC), மற்றும் தொடர்பு – பல்லூடக ஆணையம் ஆகியவை இணைந்து அவசரக் கூட்டம் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதேபோல், முஸ்லீம் அல்லாத வழிபாட்டு தலங்களின் நிலப் பிரச்னைகளை தீர்க்க ஒரு சட்டப்பூர்வ அமைப்பு உருவாக்குதல், மாற்று இடம் வழங்கும் தெளிவான நடைமுறைகள், பராமரிப்பு நிதி அமைத்தல் போன்ற நீண்டகால தீர்வுகளும் முன்மொழியப்பட்டுள்ளன.

பிரதமரின் சிறப்பு அதிகாரியான சண்முகம் மூக்கன் இந்த மகஜரை பெற்றுக்கொண்டார்.

இவ்வேளையில், இந்த கூட்டத்தில் ஒரு எம்.பியாக இல்லாமல் சக இந்துவாக வந்து கலந்துகொண்டதாகக் கூறிய கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ், சமயத்துக்கு துரோகம் செய்தவர்கள் யாராயினும் அவர்களை மன்னிக்க முடியாது என்றார்.

என்ன செய்தாலும் கண்டுகொள்ள மாட்டோம் என்ற போக்கு, இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் எனக் குறிப்பிட்ட அவர், நேற்றுக் கூடிய கூட்டத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் நிறைவுறுத்தினார்.

ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300 பேர் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!