
ஒசாகா, அக்டோபர்-23 – ஜப்பானிய இரயில் நிறுவனமான West Japan Railway, இரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக ‘கத்தி துளைக்காத குடை’ தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
இரயில் பயணங்களின் போது கத்தியேந்திய தாக்குதல்காரர்களிடமிருந்து பயணிகளும் பணியாளர்களும் தங்களைத் தற்காத்துக்கொள்ள ஏதுவாக, அச்சிறப்பு குடைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஒசாகா, கியோத்தோ நகரங்களை உட்படுத்திய வழித்தடங்களில் இயங்கும் 600 இரயில் பெட்டிகளில் அடுத்த மாதம் தொடங்கி ‘அப்பாதுகாப்புக்’ குடைகள் வைக்கப்படும்.
ஒவ்வொரு குடையும், விரிந்த நிலையில் 1 மீட்டர் நீளமும், 1.1 மீட்டர் சுற்றளவும் கொண்டுள்ளது.
கத்தியால் எளிதில் கிழிக்க முடியாத பொருட்களைக் கொண்டு அக்குடை உருவாக்கப்பட்டுள்ளது.
வெறும் 700 கிராம் எடையில், பாதுகாப்புக் கேடயத்தைக் காட்டிலும் மிகவும் மெல்லியதாக அக்குடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
குடைக்கு இந்த பக்கமிருந்தே தாக்குதல்காரர்களைக் கண்காணிக்க வலைத் துணியும் வைக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஒசாகாவில் கத்தியுடன் இரயிலுக்குள் புகுந்த மர்ம நபர், இரு பயணிகள் உள்ளிட்ட மூவரைக் கத்தியால் குத்தியதை அடுத்து, இந்த குடைத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.