இராணுவக் குத்தகை ஊழல் விசாரணை; RM6.9 மில்லியன் தங்கக் கட்டிகள், வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல்

புத்ராஜெயா, ஜனவரி-10,
இராணுவக் கொள்முதல் முறைகேடு மீதான MACC விசாரணையில் தோண்டத் தோண்ட அதிர்ச்சியாக பல்வேறு ஆதாரங்கள் சிக்கி வருகின்றன.
தற்போது சுமார் RM6.9 மில்லியன் மதிப்பிலான தங்க கட்டிகள், வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் சொத்துகளை அந்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.
அவற்றில் மூன்று 1 கிலோ தங்க கட்டிகள், ஒன்பது 100 கிராம் தங்கத் துண்டுகளும் அடங்கும்.
தவிர, அமெரிக்க டாலர், யூரோ, பவுண்ட், யென், ரியால் போன்ற பல்வேறு வெளிநாட்டு நாணயங்களும் கத்தை கத்தையாகக் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவற்றின் மதிப்பு மட்டுமே RM4 மில்லியனைத் தாண்டும் எனக் கூறப்படுகிறது.
பழுதுபார்ப்புக்காக கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள கார் பட்டறையொன்றில் விடப்பட்ட காரிலிருந்து அந்த ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.
லஞ்சப் பணத்தில் RM360,000 ரிங்கிட்டுக்கு வாங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உயர் செயல்திறன் கொண்ட SUV வாகனமும் பறிமுதல் பட்டியலில் உள்ளது.
ஆயுதப்படையின் முன்னாள் தளபதி ஜெனரல் தான் ஸ்ரீ Muhammad Hafizuddeain Jantan மற்றும் அவரது இரு மனைவிகளும் இந்த வாரம் கைதுச் செய்யப்பட்ட நிலையில், இப்பொருட்கள் சிக்கியுள்ளன.
இதற்கு முன்பு, டெண்டர் கும்பலில் தொடர்புடையதாக நம்பப்படும் 17 நிறுவன இயக்குநர்களும் காவலில் வைக்கப்பட்டனர்.
சோதனையின் போது RM2.4 மில்லியன் பணத்தை எடுத்துக் கொண்டு ஓட முயன்ற தம்பதியின் முயற்சியும் முறியடிக்கப்பட்டது.
இப்படியாக, முறைகேட்டின் பின்னணியை முழுவதுமாக வெளிச்சத்துக்குக் கொண்டுவர MACC விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.



