
மத்திய பிரதேசம், மார்ச்-26- இந்தியா, மத்திய பிரதேசத்தில் 2023-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்பட்ட லலிதா பாய் எனும் பெண், ஈராண்டுகள் கழித்து உயிரோடு வீடு திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
35 வயது லலிதா, 2023 செப்டம்பரில் திடீரென காணாமல் போனார்.
எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை
அப்போது லாரி விபத்தில் உடல் நசுங்கி பெண்ணொருவர் உயிரிழந்த வீடியோ வெளியானது.
உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்த மச்சத்தை பார்த்து அது லலிதா தான் என்று அவரது குடும்பத்தினரும் அடையாளம் காட்டி உடலைப் பெற்றுச் சென்று அடக்கம் செய்தனர்.
அப்பெண் கொலையுண்டே இறந்தார் என முடிவுச் செய்யப்பட்டு 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், லலிதா பாய் தற்போது உயிரோடு வீடு திரும்பி உறவினர்கள் மற்றும் நண்பர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார்.
லலிதாவை போலீசார் விசாரித்ததில், ஷாருக் என்ற நபர் தன்னை ஒருவரிடம் 5 லட்சம் ரூபாய்க்கு விற்று விட்டதாக குண்டை தூக்கிப் போட்டார்.
பின்னர் ராஜஸ்தான் மாநிலத்திற்கு தாம் அழைத்துச் செல்பட்டதாகவும், கைப்பேசி இல்லாததால் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் லலிதா கூறினார்.
தன்னை ‘வாங்கியவர்களின்’ பிடியில் 18 மாதங்கள் சிக்கியிருந்த பிறகு, அண்மையில் நல்லதொரு வாய்ப்பு அமைந்து, தான் தப்பித்து வந்ததாக லலிதா வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆனால் இந்த ஈராண்டுகளில் தனக்கு அங்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை.