
கொழும்பு, ஆகஸ்ட்-10 – இலங்கை சக்தி தொலைக்காட்சியின் The Crown Season 2 அனைத்துலகப் பாடல் திறன் போட்டியில் பங்கேற்றுள்ள 2 மலேசியப் போட்டியாளர்களும் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
சிலாங்கூர் செலாயாங்கைச் சேர்ந்த 27 வயது பொறியியலாளர் குருமூர்த்தி ராவ் திரிநூர்த்தி ராவ், பேராக் ஈப்போவைச் சேர்ந்த 29 வயது வங்கியாளர் யோஷினி மதியழகன் ஆகியோரே அவர்களாவர்.
சக்தி TV-யின் பிரதிநிதியாக மலேசியாவிலிருந்து பங்கேற்பாளர்களைத் தேர்வுச் செய்து வணக்கம் மலேசியா அனுப்பியிருந்தது.
இலங்கைப் போட்டியாளர்களோடு, இந்தியா- இங்கிலாந்திலிருந்தும் வந்துள்ள போட்டியாளர்களுடனும் இவ்விருவரும் சவாலில் இறங்கி, வெற்றிகரமாக முதல் சுற்றைக் கடந்து பெருமை சேர்த்துள்ளனர்.
இருவரையும் வணக்கம் மலேசியா பேட்டிக் கண்ட போது, தங்களின் இசை ஆர்வம், குடும்பத்தார் ஊட்டிய ஊக்கம், பயிற்சி என பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துக் கொண்டனர்.
இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியிருப்பது பெருமகிழ்ச்சித் தருவதாகக் கூறிய குருமூர்த்தி, அச்சுற்றிலும் நேயர்களின் ஆதரவு கிடைக்கும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
இவ்வேளையில் தாய்க்கு கிடைக்காத மேடையும் அங்கீகாரமும் தனக்குக் கிடைத்திருப்பதாகக் கூறிய யோஷினி, இயங்கலை வாயிலாக இசைப் பயிற்சி பெறுவதாகச் சொன்னார்.
திருமணம், குடும்ப விழாக்கள், பல்கலைக்கழக மேடைகள் போன்றவற்றில் பாடிய அனுபவம் உள்ள யோஷினி, இந்த அனைத்துலக மேடை தமக்கோர் அரிய வாய்ப்பு என்றார்.
போட்டிக் கள அனுபவம் குறித்தும் அவர் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
15 வயதுக்கும் மேற்பட்ட திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய மேடையை உருவாக்கித் தரும் இப்போட்டியில், குருமூர்த்தி – யோஷினி இருவரும் அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு முன்னேற நாம் வாழ்த்துவோம்.
அனைத்துலக ரீதியிலான இப்போட்டியில் நேயர்களும் வாக்களிக்க முடியும்.
இது குறித்த மேல் விவரங்களை சக்தி தொலைக்காட்சி விரைவிலேயே அறிவிக்கும்.