பத்து பஹாட், டிசம்பர்-24 – “இந்தத் தண்டனையை ஒரு படிப்பினையாகக் கொண்டு இனியாவது திருந்தி விடு!”
பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் ஜூனியர் மாணவர்களின் ஆபாசப் படங்களை வைத்திருந்த குற்றத்திற்காக 17 வயது மாணவனுக்கு தண்டனை அறிவிக்கும் முன், ஜோகூர், பத்து பஹாட் மேஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி கூறிய அறிவுரை அது.
அந்த இளம் குற்றவாளியை, 2001-ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ், மலாக்கா, ஹென்றி கர்னி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் மூன்றாண்டுகள் வைத்திருக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது.
மேனியைக் காட்டுமாறுக் கூறி 7 ஜூனியர் ஆண் மாணவர்களுக்கு உடல் ரீதி அல்லாத பாலியல் தொல்லைக் கொடுத்ததாக, முதல் குற்றச்சாட்டு முதல் 62-வது குற்றச்சாட்டு வரை அவன் மீது சுமத்தப்பட்டது.
பத்து பஹாட், குளுவாங், தங்காக் மாவட்டங்களில் பள்ளிவாசல் கழிவறை, பள்ளி, பாதிக்கப்பட்ட மாணவர்களின் வீடுகள் என பல்வேறு இடங்களில் அவன் அக்குற்றத்தைப் புரிந்துள்ளான்.
கடைசி 63-வது குற்றச்சாட்டின் படி, கடந்த மாதம் வீட்டில் மடிக்கணினியில் சிறார் ஆபாச வீடியோக்களை அவன் வைத்திருந்தான்.
அவனை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பும் பரிந்துரையை, நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல் செய்த சமூக நலத் துறை அதிகாரி முன் வைத்தார்.
மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஹென்றி கர்னியிலிருந்து வெளியேறியதும், அவன் ஓராண்டுக்கு போலீஸ் கண்காணிப்பில் இருக்க வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டார்.