தெஹ்ரான், அக்டோபர்-2 – தனது பங்காளியான லெபனானின் ஹிஸ்புல்லா தரப்புக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் ஏவுகனைத் தாக்குதலை நடத்தியதை அடுத்து, உலகச் சந்தையில் எண்ணெய் விலை 3 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளது.
இன்று Brent மற்றும் WTI கச்சா எண்ணெய் விலைகள் முறையே பீப்பாய்க்கு 73.56 டாலராகவும், 69.83 டாலராகவும் ஏற்றம் கண்டன.
எண்ணெய் ஏற்றுமதியில் உலகில் ஏழாவது இடத்திலிருக்கும் ஈரான், இஸ்ரேல் மீது தொடுத்துள்ள தாக்குதல் மத்தியக் கிழக்கில் பெரும் போருக்கே வித்திடலாம் என ஐயுறப்படுகிறது.
பதிலடிக்குத் தயாராகி வரும் இஸ்ரேல் நிச்சயமாக ஈரானின் எண்ணெய் வளங்களை குறி வைக்கும்.
அது நடந்தால், நாளொன்றுக்கு 10 லட்சம் பீப்பாய்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்.
இதனால் உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தில் மூன்றில் ஒரு பகுதி பாதிக்கப்படலாம்.
இந்நிலையில், OPEC எனப்படும் எண்ணெய் மற்றும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு இன்று அக்டோபர் 2-ம் தேதி சந்தித்து சந்தை நிலவரத்தை ஆராய்கின்றனர்.
எனினும் நடப்புக் கொள்கையில் மாற்றம் இருக்காது என்றே பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் மீது ஈரான் நேற்று 180 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய வேளை, அவற்றில் பெரும்பகுதியை? நடுவானிலேயே சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.