
ஈப்போ, மே 8- பெர்ச்சாம் ஈப்போவில், கட்டுமான பகுதியொன்றின் 24வது மாடியில், 92 சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் குடிவரவுத்துறை அதிகாரிகள் (Jabatan Imigresen) கைது செய்துள்ளனர்.
நேற்று காலை நடத்தப்பட்ட இச்சோதனையில், மொத்தம் 141 நபர்களில், இந்தோனேசிய பெண் உட்பட, வங்காளதேசம், நேபாளம், மியான்மர், இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 92 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தனது துறையால் கைது செய்யப்பட்டனர் என்று பேராக் குடிவரவுத்துறை இயக்குநர் ஜேம்ஸ் லீ தெரிவித்துள்ளார்.
மேலும் உயரமான கட்டுமான பகுதியில், குடிவரவுத்துறை அதிகாரிகளால் மேற்கொண்ட இச்சோதனை சவால் மிக்க ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து வெளிநாட்டினரும் சட்டவிரோத குடிவரவுக் குற்றத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைகளுக்காக ஈப்போ குடிவரவு டிப்போவிற்கு அனுப்பப்பட்டதாக லீ கூறியுள்ளார்