Latestமலேசியா

ஈப்போ உணவகத்தில் பெண் அட்டகாசம்; உரிமையாளருக்கு RM45,000 இழப்பு

ஈப்போ, ஜனவரி 28 – ஈப்போ Taman Tasek Damai பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில், உணவு கட்டணம் தொடர்பான அதிருப்தியால், இன்று அதிகாலை ஒரு பெண் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில், சந்தேகநபர் வாடிக்கையாளர்களின் உணவுகளை எடுத்துக் கொண்டு, ஆடவர் ஒருவரை அறைந்ததுடன், மற்றொருவரின் மார்புப் பகுதியில் காயத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று ஈப்போ மாவட்ட காவல் துறை தலைவர், Asisten Komisioner Abang Zainal Abidin  தெரிவித்துள்ளார்.

மேலும், இறைச்சி வெட்ட பயன்படும் கத்தியை கொண்டு உணவக உபகரணங்களை சேதப்படுத்தி, உணவு காட்சிப்பெட்டியின் கண்ணாடியையும் உடைத்துள்ளார். அதுமட்டுமின்றி காசுப் பெட்டியில் இருந்த பணத்தை எடுத்துச் சென்று, சில வாடிக்கையாளர்களுக்கு உணவை இலவசமாக வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால், உணவக உரிமையாளருக்கு சொத்து சேதமும் பண இழப்புமாக சேர்த்து சுமார் 45,000 ரிங்கிட்டுக்கும் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் போலீசார் சந்தேகநபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்ப விசாரணையில், அந்தப் பெண்ணுக்கு மனநல சிகிச்சை வரலாறு இருப்பதும், சம்பவத்திற்கு முன்பு தைப்பிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்ததும் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தவறான தகவல்கள் அல்லது ஊகங்களை பரப்ப வேண்டாம் என காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!