
மலாக்கா, ஆகஸ்ட்-11 – மலாக்காவில் இந்து ஈமக்காரியங்களுக்கான நில விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாமென, மாநில ம.இ.கா தலைவரும் மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பிருமான VP ஷண்முகம் சம்பந்தப்பட்ட தரப்புகளை நினைவுறுத்தியுள்ளார்.
பல ஆண்டுகளாக மலாக்கா அரசாங்கத்தில் ம.இகா இடம் பெற்றிருந்த போதே அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன.
நிலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், அனுமதி தொடர்பில் பல்வேறு நிர்வாக நடைமுறைகள் உள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
அவற்றை முறையாகப் பின்பற்ற வேண்டும்.
எனவே தான் சட்டத்திற்குட்பட்டு அனைத்தையும் மாநில ம.இ.கா இத்தனை காலமும் மேற்கொண்டு வந்துள்ளது என்றார் அவர்.
ஆனால், உண்மை விஷயம் தெரியாமல், என்னமோ இதுவரை மஇ.கா ஒன்றுமே செய்யாதது போலவும், ஒரே இரவில் தாங்கள் தான் பிரச்னையைத் தீர்த்து வைத்தது போலவும் சிலர் பீற்றுகின்றனர்.
இது அரசியல்வாதிகளுக்கு, அதுவும் ஒற்றுமை அரசாங்கக் கூட்டணி தலைவர்களுக்கு அழகல்ல என, மலாக்கா ம.இ.கா தலைவர்கள் சிலரும் சாடினர்.
இதுபோன்ற பேச்சுகள், மாநில ம.இ.கா மட்டுமின்றி மலாக்கா அரசாங்கத்திற்கும் கெட்டப் பெயரை ஏற்டுத்தி விடுமென அவர்கள் சுட்டிக் காட்டினர்.
DAP ஆட்சிக்குழு உறுப்பினரின் முயற்சியில் பண்டா ஹிலிரில் இந்துக்களின் ஈமக் காரியங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக, மலாக்கா முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர் ஜி. சாமிநாதன் முன்னதாக பேசியிருந்தார்.
நீண்ட கால பிரச்னைக்கு இதன் வழி தீர்வு காணப்பட்டிருப்பதாக, அவர் கூறிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.