ஈரானில் மோசமடையும் அரசு எதிர்ப்புப் போராட்டம்; 48 பேர் பலியானதாக தகவல்

தெஹ்ரான், ஜனவரி-10,
ஈரானில் டிசம்பர் கடைசியில் வெடித்த நாடு தழுவிய போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன.
ஈரானிய நாணய வீழ்ச்சியால் தலைநகர் தெஹ்ரானில் தொடங்கிய ஆர்ப்பாட்டம், தற்போது நூற்றுக்கணக்கான நகரங்களில் அரசு எதிர்ப்புப் போராட்டமாக வெடித்துள்ளது.
இந்த 13 நாட்களில் 48 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இணையச் சேவைகளை அரசாங்கம் துண்டித்திருப்பது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
தெஹ்ரானில் மசூதிகளும் பல அரசு கட்டடங்களும் தீ வைக்கப்பட்டு பற்றி எரிகின்றன.
சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோக்களில், கட்டடங்களிலிருந்து தீ கொழுந்து விட்டு எரிவதை காணமுடிகிறது.
சாலைகளில் போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டு, பாதுகாப்பு படையினருடன் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாரிகள் இதை ‘கீழறுப்பு வேலை’ எனக் கூறினாலும், எதிர்கட்சிகள், வாழ்வாதார பிரச்னை மற்றும் அரசியல் அடக்குமுறையால் ஏற்பட்ட மக்களின் வெடிப்பே என வலியுறுத்துகின்றன.
இவ்வேளையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் வெறும் ‘பொது சொத்துக்களை நாசமாக்கும் கும்பலே’ என ஈரானிய உச்சத் தலைவர் Ayatollah Ali Khamenai சாடியுள்ளார்.
ஈரானை ‘சாய்க்கத் துடிக்கும்’ அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பின் மனதை குளிரவைக்க நடத்தப்படும் நாடகமே இது என்றார் அவர்.
என்ன நடந்தாலும் தமதரசாங்கம் பின்வாங்காது என Ayatollah சூளுரைத்தார்.
ஈரானிய நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும், மக்களைத் தொடர்ந்து ‘கொன்றால்’ அந்நாட்டின் மீது படையெடுப்போம் என்றும் ட்ரம்ப் எச்சரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் அரசாங்கங்கள் ஈரானில் நிலவும் பதற்றம் குறித்து கவலைத் தெரிவித்துள்ளன.
பல ஆண்டுகளில் காணாத அளவுக்கு பெரிய எதிர்ப்பை Ayatollah எதிர்கொண்டுள்ள நிலையில், வெனிசுவலாவில் காட்டிய அதிரடியை ஈரானிலும் அமெரிக்கா காட்டி விடுமோ என்ற அச்சம் அனத்துலகச் சமூகங்களைச் சூழ்ந்துள்ளது



