
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – ஜாரா கைரினா மகாதீரின் பிரேத பரிசோதனைக்கு தொடர்புடைய மருத்துவரைப் போல ஆள்மாறாட்டம் செய்ததாக கூறப்படும் ஒருவரை அடையாளம் கண்டுள்ளதாக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) தெரிவித்துள்ளது.
டாங் வாங்கி மாவட்ட காவல் தலைமையகத்தில் போலீசார் அந்த சந்தேக நபரின் வாக்குமூலத்தை பதிவு செய்ததோடு, அவரது தகவல் தொடர்பு சாதனங்களையும் பகுப்பாய்வுக்காக கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபரின் டிக்டோக் நேரலை ஒளிபரப்பில் பங்கேற்ற இரண்டு நபர்களின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, நேற்றிரவு கோத்தா டாமன்சாராவில் அந்நபர் கைது செய்யப்பட்டார்.
மரணங்கள், விபத்துகள் மற்றும் துயர சம்பவங்கள் தொடர்பான தவறான தகவல்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு துன்பம் அளிப்பதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களை தவறாக வழிநடத்தவும், அதிகாரிகளின் விசாரணையில் தலையிடவும் வழிவகுக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 500,000 ரிங்கிட் அபராதமும் இரண்டாண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படுமென்று அறியப்படுகின்றது.
கடந்த சனிக்கிழமை, தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில், டிக்டோக் நேரலை ஒன்றில், அந்த நபர் ஜாரா கைரினாவின் பிரேத பரிசோதனையில் தானும் பங்கேற்றதாகக் கூறியிருந்தாலும், சுகாதார அமைச்சின் சோதனையில் அவர் மருத்துவ நிபுணரோ அல்லது அமைச்சின் ஊழியரோ அல்ல என்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தார்.