
புத்ராஜெயா, மார்ச்-5 – முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் MACC-யிடம் இன்று வாக்குமூலம் அளிக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அவரின் உடல்நலத்தைக் கருதி அவ்வாறு செய்யப்பட்டதாக, அந்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கூறியது.
இஸ்மாயில் சாப்ரி இன்று காலை புத்ராஜெயா MACC அலுவலகம் வருவார் என எதிர்பார்க்கப்படுவதாக, அதன் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி முன்னதாகக் கூறியிருந்தார்.
ஒன்பதாவது பிரதமராக இருந்த போது Keluarga Malaysia கொள்கை மற்றும் சுலோக விளம்பர நடவடிக்கைகளுக்காக 700 மில்லியன் ரிங்கிட் செலவான விவகாரம் தொடர்பில், இஸ்மாயில் சாப்ரியிடம் இரண்டாவது முறையாக வாக்குமூலம் பதிவுச் செய்யப்படவுள்ளது.
MACC உத்தரவின் படி, பிப்ரவரி 10-ஆம் தேதி தனது சொத்து விவரங்களை அறிவித்த இஸ்மாயில் சாப்ரி, பிப்ரவரி 19-ஆம் தேதி முதன் முறையாக வாக்குமூலம் அளித்தார்.
பிறகு அவர் வீட்டில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, அவரின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்குத் தொடர்பான இடங்களிலிருந்து 170 மில்லியன் ரொக்கப் பணமும், 7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 16 தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.