
ஷங்ஹாய் – ஜூலை-20 – சீனா, ஷங்ஹாயில் (Shanghai) உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்ற தீர்மானத்தில், தினமும் 200 diet மாத்திரைகளை உட்கொண்ட பெண், அநியாயத்துக்கு உடல் மெலிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
39 வயதில் வெறும் 25 கிலோ கிராம் எடையுடன் நடக்கக் கூட முடியாமல் சக்கர நாற்காலியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இவரின் அசல் உடல் எடையே வெறும் 40 கிலோ கிராம் தான்; இருந்தும் அதில் அவருக்குத் திருப்தியில்லை.
குறிப்பாக உள் தொடைப்பகுதியில் இருக்கும் கொழுப்புகள் மீது… அதற்கு ஒரு வழியைத் தேடிய போதே இந்த pink மாத்திரைகள் பற்றித் தெரிய வந்துள்ளது.
ஜப்பானில் தயாரிக்கப்பட்ட இளஞ்சிவப்பு நிறத்திலான அந்த diet மாத்திரைகளை 12 ஆண்டுகளாக அப்பெண் தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ளார்.
உணவுகளைப் படிப்படியாகக் குறைத்து மாத்திரைகளை தினமும் தவறாமல் உட்கொண்டு வந்தவர், ஒரு கட்டத்தில் நாளொன்றுக்கு 150 மாத்திரைகளைத் தாண்டி, உணவுண்பதையே முழுவதுமாக நிறுத்தினார்.
கடைசியில் 25 கிலோ கிராமுக்கு உடல் எடை குறைந்துபோனாலும், அது தன்னை பெரும் மலச்சிக்கலில் கொண்டுபோய் விட்டதை அவர் உணரவில்லை. உடல்நிலை மோசமாகி தற்போது மருத்துவமனையில் படுத்தப் படுக்கையாக உள்ளார்.
பரிசோதனையில், அப்பெண்ணுக்கு பசியின்மை, நாள்பட்ட மலச்சிக்கல் மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
மருத்துவமனை பகிர்ந்துள்ள வீடியோவில், அப்பெண் எலும்பும் தோலுமாக உள்ளார்; அவரது முதுகெலும்பு முதுகிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. உடல் எடையைக் குறைக்க குறுக்கு வழியைத் தேடியவரின் உடல் ‘உருக்குலைந்து’ போயிருப்பது வலைத்தளவாசிகள் மத்தியில் பேச்சுப்பொருளாகியுள்ளது.