Latestமலேசியா

உணவகத்துறையில் 25,000 பணியாளர்கள் பற்றாக்குறை; மாற்று தொழிலாளர்கள் முறையைக் கையாள கோரிக்கை – பிரெஸ்மா & பிரிமாஸ்

கோலாலம்பூர், ஜனவரி 23 – மலேசியாவில் உணவகத்துறையில் ஏறக்குறைய 25,000 பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாக பிரெஸ்மா எனப்படும் மலேசியா முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கமும், பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்தியர் உணவக உரிமையாளர் சங்கமும் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்நிலையில், வெளிநாட்டு தொழிலாளர்களை அதிக அளவில் நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான அனுமதியை அரசு வழங்க வேண்டும் என அவை கோரிக்கை விடுத்துள்ளன.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து, உணவகத் துறைக்கான வெளிநாட்டு தொழிலாளர்களின் பணி அமர்த்தல் நிறுத்தப்பட்டுள்ளதால், உணவகங்கள் பல்வேறு சவால்களையும் செயல்பாட்டு பிரச்சனைகளையும் சந்தித்து வருவதாக பிரெஸ்மா தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி தெரிவித்தார்.

இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அரசாங்கத்திற்கு சில முக்கியமான கோரிக்கைகளை முன்வைப்பதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான பல அடுக்கு வரி முறை அதாவது multi-tier levy system-மை, தொழிலாளர் பற்றாக்குறைக்குத் தீர்வு காணும் வரை தற்காலிகமாக நிறுத்தப் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டில் 24 மணி நேரம் இயங்கும் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வகை உணவகங்களும் மனிதவளத்தைச் சார்ந்துள்ள நிலையில், தொடர்ந்து சிரமங்களை சந்திக்காமல் இருக்க, வெளிநாட்டு தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்த அனுமதி அளிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார், பிரிமாஸ் தலைவர் டத்தோ கோவிந்தசாமி.

இச்கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான அரசாங்கம் உட்பட உள்துறை அமைச்சு, மனிதவள அமைச்சு ஆகிய அமைப்புகள் பரிசீலித்து, உடனடி தீர்வுகளைச் செயல்படுத்த வேண்டும் என பிரெஸ்மா மற்றும் பிரிமாஸ் சங்கங்கள் கேட்டுக்கொண்டன.

மலேசியாவில் உணவகத்துறை மிக முக்கியமான பொருளாதார துறையாகும். இத்துறையின் வளர்ச்சியை தடைசெய்யாமல், பணியாளர் பற்றாக்குறையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,என்று அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

பணியாளர்கள் பற்றாக்குறையால் ஏற்கனவே பல உணவகங்கள் மூடப்பட்ட வரும் நிலையில், இந்த தொழிலாளர் பற்றாக்குறை நீடித்தால், மேலும் பல கடைகள் மூடப்படும் நிலை உருவாகும் என்ற அச்சத்தை அவர்கள் வெளிப்படுத்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!