
டாமான்சாரா, பிப்ரவரி-23- உயர் இரத்த அழுத்தம் காரணமாக நேற்று அதிகாலை வீட்டில் மயங்கி விழுந்த முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்பின் உடல்நிலை சீராக உள்ளது.
அவர் சுயநினைவுக்குத் திரும்பியுள்ளார்; என்றாலும் கோத்தா டாமான்சாரா தனியார் மருத்துவமனையில் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
தற்போதைக்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் அவரைப் பார்க்க அனுமதியில்லை என, அவரின் பத்திரிகைச் செயலாளர் அஸ்ரான் ஃபித்ரி ரஹிம் தெரிவித்தார்.
அவர் விரைவிலேயே குணமடைய பொது மக்கள் தொடர்ந்து பிராத்திக்குமாறும் அஸ்ரான் கேட்டுக் கொண்டார்.
பெரா நாடாளுமன்ற உறுப்பினருமான 65 வயது இஸ்மாயில் சாப்ரி, சனிக்கிழமை விடியற்காலை 2.30 மணிக்கு வீட்டில் மயங்கி விழுந்து, சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் 2021 ஆகஸ்ட் முதல் 2022 பொதுத் தேர்தல் வரை நாட்டின் 9-ஆவது பிரதமராக இருந்துள்ளார்.