
கோலாலம்பூர், ஜூலை-30- HVGT எனப்படும் உயர் மதிப்புள்ள பொருட்களுக்கு வரி விதிக்கும் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளது.
நிதியமைச்சரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களவைக்கு வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில் அதனைத் தெரிவித்தார்.
என்ற போதும், ஆடம்பரப் பொருட்களுக்கு வரி விதிக்கும் கொள்கை, திருத்தப்பட்ட விற்பனை வரி கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
அதாவது, ஆடம்பர மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் இப்போது 5% அல்லது 10% வரி விகிதங்களுக்கு உட்பட்டவை.
புதிதாக செயல்படுத்தப்பட்ட பல நிதி சீர்திருத்தங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டியிருப்பதால், HVGT வரி விதிப்பை நிறுத்தி வைப்பதாக, பிரதமர் கடந்த பிப்ரவரியில் தெரிவித்திருந்தார்.
இந்த வரி பார்க்கப் போனால் கடந்தாண்டு மே 1-ஆம் தேதியே அமுலுக்கு வந்திருக்க வேண்டும்.
இது முதலில், திருத்தப்பட்ட 2023 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, பின்னர் ஒரு வருடம் கழித்து மேலும் சில விவரங்களோடு அறிவிக்கப்பட்டது.
இது ஆடம்பரப் பொருட்களுக்கு 5% முதல் 10% வரை வரி விதிக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. மேலும் ஆண்டு வருவாயில் கூடுதலாக RM700 மில்லியன் ஈட்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், வரி விதிக்கப்படக்கூடிய பொருட்களுக்கான அளவுகோல்கள் மற்றும் அது உள்ளடக்கும் பொருட்களின் வரம்பு உள்ளிட்ட விவரங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. நகைகள் மற்றும் கடிகாரங்கள் மட்டுமே வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.