
ஹானோய், மார்ச்-11 – வியட்நாமின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாக இருக்கும் இரயில் தெருக்களுக்கு, இனியும் சுற்றுப் பயணங்களை ஏற்பாடு செய்ய வேண்டாமென சுற்றுலா நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
ஹனோய் சுற்றுலா துறை அக்கோரிக்கையை முன்வைத்துள்ளது.
Cafe கடைகள் செயல்படும் இரயில் தெருக்களில் விபத்துகள் ஏற்படும் ஆபத்தைக் குறைப்பதற்கு, தத்தம் பணியாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்குமாறும் அவை அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அங்கு பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோரை அடையாளம் கண்டு உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹனோயில் Le Duan, Tran Phu, Chu Dong மற்றும் Phung Hung தெருக்களை இணைக்கும் 2 கிலோ மீட்டர் நீள இரயில் தெருவானது, உலகப் புகழ்பெற்ற சுற்றுலா இடங்களில் ஒன்றாகும்.
அங்கு ஒரு குறுகிய தண்டவாளத்தை ஒட்டிய இரு புறங்களிலும் கடைகளும் வீடுகளும் இருக்கும்.
சிறு வியாபாரிகள் தண்டவாளத்தின் மேல் கடைகளைத் திறந்திருப்பார்கள்; இரயில் வரும் போது கடைகளின் கூரைகள் உள்பக்கமாக மூடப்பட்டு பால்கனிகளில் மக்கள் கூட்டமாக நின்று வேடிக்கைப் பார்ப்பர்.
அப்போது இரயில் அப்பகுதியைக் கடந்துசெல்லும் அழகைக் காண்பதற்கும் அனுபவத்தைப் பெறுவதற்குமே ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான சுற்றுப்பயணிகள் அங்கு கூடுகின்றனர்.
இரு புறங்களிலும் ஏராளமான காப்பிக் கடைகள் அமைந்திருப்பதால், காப்பியை அருந்திகொண்டே இரயில் தங்களை கடந்துசெல்வதை காணமுடியும்.
இதனாலேயே சுற்றுப்பயணிகள் மத்தியில் அப்பகுதி ‘புதிய இரயில் தெரு காப்பி’ என்றும் அறியப்படுகிறது.
ஆனால், உள்ளூர்வாசிகளும் சுற்றுப்பயணிகளும் இரயில்வே நடைபாதைகள் மட்டுமின்றி, தண்டவாளங்களிலும் கூட்டமாக இறங்கி விடுவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
எனவே எந்தவோர் அசம்பாவிதமும் ஏற்படாதிருக்க ஹனோய் சுற்றுலா துறை அந்நடவடிக்கையில் இறங்கியுள்ளது.