
ஷா ஆலாம், அக்டோபர்-25 – ASEM எனப்படும் மலேசிய செமிகண்டக்டர் முன்னேற்ற அகாடமி மற்றும் மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகமான IIT Madras Global ஆகிய இரண்டும், உலக செமிகண்டக்டர் மதிப்புச் சங்கிலியில் மலேசியாவின் நிலையை வலுப்படுத்தும் நோக்கில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒத்துழைப்பானது அமெரிக்கா, சீனா, தைவான் போன்ற நாடுகளின் செமிகண்டக்டர் துறைகளையே சார்ந்திருக்கும் நிலையைக் குறைத்து, மலேசியாவுக்கான புதிய சந்தை மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கும்.
கடந்த ஜூலையில் சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் Ng Sze Han தலைமையில் சென்னைக்கு மேற்கொண்ட அலுவல் பயணத்தின் தொடர்ச்சியாக இந்தக் ஒத்துழைப்பு உருவாக்கப்பட்டது.
அதன் போது IIT மெட்ராஸின் இயக்குனர் பேராசிரியர் V. காமகோடியுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் மூலம் மலேசியாவில் முன்னோடித் திட்டங்களுக்கும் அடித்தளம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் MoU ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்வு சிலாங்கூர் மாநிலச் செயலகக் கட்டடத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் இந்திய உயர் ஆணையர் பி.என். ரெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இருந்தனர்.
இந்த ஒத்துழைப்பின் பலனாக 2026-ஆம் ஆண்டில் 2 முக்கிய திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன;
அவை முறையே, RISC-V – கணினி வடிவமைப்பு திறன் மேம்பாட்டு திட்டம் மற்றும் யுனிசெல் – IIT மெட்ராஸ் கூட்டு சான்றிதழ் மற்றும் மாணவர் பரிமாற்ற திட்டமாகும்.
இவை 350-க்கும் மேற்பட்ட மாணவர்களைப் பயிற்றுவித்து, மலேசியாவின் செமிகண்டக்டர் கல்வி மற்றும் ஆராய்ச்சி திறன்களை உயர்த்தும்.
ASEM இதுவரை 600-க்கும் மேற்பட்ட மாணவர்களைப் பயிற்றுவித்துள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் 20,000 பொறியியலாளர்களை உருவாக்கும் இலக்கையும் கொண்டுள்ளது.
அதோடு, IIT மெட்ராஸ் மலேசியாவில் IIT Global Research Hub ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
இது மலேசியாவை, ஆசியான் வட்டாரத்தின் செமிகண்டக்டர் புத்தாக்க நுழைவாயிலாக மாற்றும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.



