
கோலாலம்பூர், நவ 17 – அனைத்துலக பேட்மிண்டன் அரங்கில்
சிறந்த வெற்றிகளை பதித்துவரும் மலேசியாவின் முன்னணி
மகளிர் இரட்டையர் ஜோடியான பியர்லி டான் – எம் .தீனா
இவ்வாண்டு உலக பேட்மிண்டன் சுற்று போட்டிகளில் கலந்துகொண்டு ரி.ம 1.26 மில்லியன் அல்லது 12 லட்சத்து 60,000 ரிங்கிட்டை பரிசுப் பணமாக வென்றுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமையன்று ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியனாக வாகை சூடியதன் மூலம் உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரராக கணிக்கப்பட்டுள்ள அந்த ஜோடி இவ்வாண்டு தங்களது மூன்றாவது வெற்றியை பெற்று மலேசியாவிற்கு பெருமையை தேடித் தந்துள்ளனர்.
அடுத்த மாதம் சீனாவின் HangZhou வில் நடைபெறவிருக்கும் World Tour ( உலக இறுதிச் சுற்று ) பேட்மிண்டன் போட்டிக்கு தயாராகும்
பொருட்டு பியர்லி டான் – எம் .தீனா இணை அடுத்த வாரம் நடைபெறும் ஆஸ்திரேலியா பொது விருது போட்டியில் பங்கேற்கவில்லை.
இவ்வாண்டு 17 World Tours பேட்மிண்டன் போட்டிகளில் கலந்துகொண்டதன் மூலம் அவர்கள் தங்களது விளையாட்டு வாழ்க்கையில் கிட்டத்தட்ட 1.26 மில்லியன் ரிங்கிட் தொகையை பரிசுப் பணமாக பெற்றுள்ளனர்.
அது மட்டுமின்றி இவ்வாண்டு மூன்று போட்டிகளில் இரண்டாவது இடத்தையும், நான்கு போட்களில் அரையிறுதி ஆட்டத்திற்கும், ஐந்து போட்டிகளில் கால் இறுதி சுற்றுக்கும் தகுதி பெற்று அவர்கள் சாதனை படைத்தனர்.
இதுதவிர பாரிஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அவர்கள் வரலாற்றுப் பூர்வமான வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றனர். உலக சாம்பியன்ஷீப் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் முறையாக மலேசிய ஜோடிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது.



