
புத்ராஜெயா, டிசம்பர்-9, ஊழல் குற்றச்சாட்டில் தமக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் (Syed Saddiq Syed Abdul Rahman) செய்துள்ள மேல்முறையீடு, அடுத்தாண்டு மார்ச் 19-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
மார்ச் 19, 20 என இரு நாட்களுக்கு மேல்முறையீடு செவிமெடுக்கப்படுமென, புத்ராஜெயா மேல் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதற்கு முன்பாக, மார்ச் 4-ஆம் தேதிக்குள் இரு தரப்புமே தங்களின் வாதங்களை எழுத்துப் பூர்வமாக சமர்ப்பித்து விட வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பெர்சாத்து கட்சியிலிருந்த போது, அதன் இளைஞர் பிரிவுக்குச் சொந்தமான 1.12 மில்லியன் ரிங்கிட் நிதியை முறைகேடு செய்தது, நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டது மற்றும் பணச்சலவை செய்தது தொடர்பில், 4 குற்றச்சாட்டுகளில் சைட் சாடிக் குற்றவாளியே என கடந்தாண்டு நவம்பரில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இதையடுத்து அவருக்கு ஏழாண்டு சிறை, 2 பிரம்படிகள், 10 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது.
இவ்வேளையில், ஓராண்டு காத்திருப்புக்குப் பிறகு மேல்முறையீட்டுக்குத் தேதி குறிக்கப்பட்டிருப்பது குறித்து சைட் சாடிக் மகிழ்ச்சித் தெரிவித்தார்.
தம் மீதான களங்கத்தைப் போக்க இந்த மேல்முறையீட்டை நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளப் போவதாக அவர் சொன்னார்.