
வாஷிங்டன், ஆகஸ்ட்-12 – இந்தியாவிடமிருந்து அச்சுறுத்தல் எழுந்தால், பாதி உலகையையே அழித்து விடுவோம் என, பாகிஸ்தானிய இராணுவத் தளபதி அசிம் முனீர் இந்தியாவுக்கு அணுவாயுத மிரட்டல் விடுத்துள்ளார்.
அதுவும் அமெரிக்க மண்ணிலிருந்து அவர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 மாதங்களில் இரண்டாவது முறையாக அமெரிக்கா சென்றுள்ள முனீர், அங்கு நடைபெற்ற ஒரு விருந்தில் இந்தியாவுக்கான இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அணுவாயுத வல்லரசான பாகிஸ்தானை இந்தியா உட்பட யார் அழிக்க நினைத்தாலும், பாதி உலகத்தையே எங்களோடு சேர்த்துக் கொள்வோம் என்றார் அவர்.
இவ்வேளையில் சிந்து நதி இந்தியாவின் குடும்பச் சொத்து அல்ல எனக் குறிப்பிட்ட முனீர், அங்கு இந்தியா அணைக் கட்டினால் அதனை 10 ஏவுகணைகளை வீசி அழிப்போம்; இஸ்லாமாபாத்துக்கு ஒன்றும் ஏவுகணைகள் பஞ்சமில்லை என முனீர் சொன்னார்.
இந்தியா தன்னை ஒரு உலகத் தலைவராகக் காட்டிக் கொள்ளத் துடிப்பதாகவும், ஆனால் உண்மையில் அந்நிலையை அடைவதிலிருந்து அது வெகு தூரத்திலிருப்பதாகவும் முனீர் கிண்டலடித்துள்ளார்.
ஒரு மூன்றாவது நாட்டிலிருந்து, அதுவும் இந்தியாவுக்கு 50% வரி விதித்து ‘பகைமை’ பாராட்டி வரும் அமெரிக்காவிலிருந்து, பாகிஸ்தான் இராணுவத்தின் சக்தி வாய்ந்த மனிதர் மிரட்டியிருப்பது புது டெல்லியின் சினத்தை மேலும் அதிகரிக்கும் என ஐயுறப்படுகிறது.