
எங்கும் எப்போதும்…கிள்ளான் பள்ளத்தாக்கு போக்குவரத்து நெரிசலால் மலேசியாவுக்கு தினசரி RM54 மில்லியன் இழப்பு
கோலாலாம்பூர், பிப்ரவரி-12,
கிள்ளான் பள்ளத்தாக்கில் மோசமாகி வரும் போக்குவரத்து நெரிசல், மலேசியாவுக்கு தினமும் சுமார் RM54 மில்லியன் இழப்பை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அடுத்த வாரம் சீன புத்தாண்டும் இரமலான் நோன்பும் ஒருசேர வருவதால், சாலைகளில் வாகன நெரிசல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக வட–தெற்கு நெடுஞ்சாலையில் தினசரி 2.2 மில்லியன் வாகனங்கள் பயணிக்கும் என கணிக்கப்படுகிறது.
ஒரு காலத்தில் வெறும் 30 நிமிடங்களில் முடிந்த பயணங்கள், இப்போது 2 மணி நேரத்திற்கும் மேலாக நீளுவதாக அந்த ஆய்வு கூறியது.
ஆண்டுக் கணக்கில் பார்த்தால், போக்குவரத்து நெரிசலால் கிள்ளான் பள்ளத்தாக்குவாசிகள் ஆண்டுக்கு 500 மணி நேரங்கள் வரை விரயமாக்குகின்றனர்.
இது, வாழ்நாளில் 20 முழு நாட்கள் வெறும் வாகனத்தில் காத்திருப்பதற்காக செலவிடப்படுவதை குறிக்கிறது.
இன்னும் நேரடியாக சொல்வதென்றால், ஒவ்வொரு வேலை நாளிலும் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக, வேலை, ஓய்வு, குடும்பம் அல்லது சுவாசிக்க கூட பயன்படுத்தக்கூடிய நேரம், போக்குவரத்து நெரிசலில் வீணாகிறது.
இப்படி வாகன நெரிசலால் அதிகரிக்கும் எரிபொருள் செலவுகள், உற்பத்தித் திறன் இழப்புகள் ஆகியவை நாட்டின் பொருளாதாரத்திற்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
பொது போக்குவரத்து ஒருங்கிணைப்பு, கடுமையான போக்குவரத்து மேலாண்மை, நீண்டகால நகர திட்டமிடல் ஆகியவை இல்லாமல், நிலைமை மேலும் மோசமடையும் எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.



