
கோலாலம்பூர், அக்டோபர்-9,
மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP அண்மையில் பெரிக்காத்தான் நேஷனல் தலைவரும் முன்னாள் பிரதமருமான தான் ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையில் தனது ஆண்டு பொதுக்கூட்டத்தை நடத்தியது.
45 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் அதிகளவில் கலந்து கொண்டதாலும், அதில் முஹிடினை வரும் 16-ஆவது பொதுத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக அறிவித்ததாலும், அரசியல் வட்டாரத்தில் இக்கூட்டம் பெரும் கவனத்தை ஈர்த்தது.
அதோடு, வரும் தேர்தலில் 12 நாடாளுமன்ற மற்றும் 20 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்குமாறு பெரிக்காத்தானிடம் MIPP தலைவர் பி.புனிதன் கோரிக்கை வைத்துள்ளார்.
இது, ம.இ.கா.வுக்கு தேசிய முன்னணி வழங்கிய தொகுதிகளை விட சற்று அதிகமாகும்.
கடந்த முறை ம.இ.கா பெற்றவை 10 நாடாளுமன்ற மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளாகும்.
இந்நிலையில், ம.இ.காவிலிருந்து பிரிந்து வந்த உதிரி கட்சியான MIPP-க்கு அவர்கள் கேட்கும் தொகுதிகள் வழங்கப்பட்டால், அது ஒரு முக்கிய முன்னேற்றமாக இருக்கும் என்கிறார் மூத்த சமூக – அரசியல் ஆய்வாளர் டத்தோ எம். பெரியசாமி.
அதுவும் கடந்தாண்டு தான் அக்கட்சி பெரிக்காத்தானில் அதிகாரப்பூர்வ உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் 4 முக்கியமான கோரிக்கைகளையும் கூட்டணித் தலைமையிடம் அது முன்வைத்துள்ளது.
பிரதமர் தலைமையில் இந்தியர் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அமைத்தல், மித்ராவுக்கு 300 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு, மெட்ரிக்குலேஷனில் 2,000 இடங்கள், அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களுக்கு 7% இட ஒதுக்கீடு ஆகியவை அக்கோரிக்கைகளாகும்.
இத்திட்டங்கள் அனைத்தும் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் தலைமையில் ம.இ.கா உருவாக்கிய இந்திய மேம்பாட்டு பெருந்திட்டத்துடன் ஒத்துபோகின்றன.
இதனால், MIPP ம.இ.கா.வின் நிழல் கட்சியா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளதையும் மறுக்க முடியாது என பெரியசாமி சுட்டிக் காட்டினார்.
ஆனால், MIPP உறுப்பினர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருப்பது, அதற்கு கூடுதல் பலமாகவும் அமையலாம் என்றார் அவர்.
ம.இ.காவிலிருந்து பிரிந்துசென்ற கட்சிகளில் IPF தவிர மற்றவை அனைத்தும் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டன.
ஆக, எதிர்கால அரசியலில் ம.இ.கா.வின் இடத்தை MIPP உண்மையிலேயே நிரப்புமா, அல்லது இது ஒரு தற்காலிக அரசியல் முயற்சியா என்ற கேள்வி இந்தியச் சமூகத்தில் இன்னமும் நீடிக்கிறது.
இதற்கு காலமும் அரசியல் சூழலும் தான் பதில் சொல்லும் என பெரியசாமி தெரிவித்தார்.