
கோலாலம்பூர், அக்டோபர்- 17,
தேசிய முன்னணி எனப்படும் பாரிசான் நேஷனலில் எந்தக் கட்சியும் நீடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று அக்கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்திருக்கிறார். தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து ம.இ.கா விலக முடிவு செய்தால் அதனை ஏற்கத் தயாராக இருப்பதாக அம்னோவின் தலைவரும் துணைப் பிரதமரருமான ஸாஹிட் இன்று ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.
தேசிய முன்னணியிலிருந்து வெளியேற நாங்கள் (ம.இ.கா) தயாராக இருக்கிறோம் என்று யார் சொன்னது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தொடக்கத்தில் தேசிய முன்னணியில் 14 உறுப்புக் கட்சிகள் இருந்ததால் அந்த கூட்டணியிலிருந்து ஒரு கட்சி வெளியேற திறந்த மனதுடன் நங்கள் ஏற்றுக்கொண்டோம். எந்தவொரு கட்சியும் தேசிய முன்னணியில் இணையவோ அல்லது அந்த கூட்டணியை விட்டு வெளியேறவோ எந்த கட்டாயமும் இல்லை. எந்த அரசியல் கூட்டணியில் சேருவது என்பது குறித்து மஇகா புத்திசாலித்தனமான முடிவை எடுக்கும் என்று தாம் நம்புவதாக ஆசியான் விளையாட்டு தொழில் கண்காட்சி 2025 ஐ தொடக்கிவைத்த பின் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார். நவம்பர் 16 ஆம்தேதியன்று நடைபெறவிருக்கும் மஇகாவின் ஆண்டு பொது பேரவைக்கு தாம் ஏன் அழைக்கப்படவில்லை என்று ஸாஹிட்டிடம் கேட்கப்பட்டதற்கு, ம.இ.காவின் பொதுப் பேரவைக்கு தாம் அழைக்கப்படாதது இது முதல் முறை அல்ல. அவர்கள் தங்களது உட்கட்சி பிரச்னையை தீர்க்க விரும்புகிறார்கள், அதற்கான இடத்தை நாங்கள் அவர்களுக்கு வழங்குகிறோம் என்று அவர் மறுமொழி தெரிவித்தார்.