
ஷா ஆலம் – ஆகஸ்ட் 4 – தினந்தோறும் விதவிதமான வாடிக்கையாளர்களை சந்திக்கும் ‘இ-ஹெய்லிங்’ ஓட்டுநர்களின் வேலை உண்மையிலே மிகவும் சவால் வாய்ந்த ஒன்றாகும். அந்த வகையில் தனது கசப்பான அனுபவ பகிர்வை இ-ஹெய்லிங் ஓட்டுநர் ஒருவர் தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தனது வாகனத்தில் ஏறிய இரு வாடிக்கையாளர்களில் ஒருவர் கால்ச்சட்டை அணியாமலும் மலம் கழித்த நிலையிலும் உட்கார்ந்திருந்ததைக் கண்டு அந்த ‘இ-ஹெய்லிங்’ ஓட்டுநர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
விடியற்காலையில், தலைநகரிலிருக்கும் தங்கும் விடுதியொன்றிலிருந்து வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் இருவரை அவர் ஏற்றிய போது, அவர்களிருவரும் குடிபோதையில் இருந்தனர் என்று வலைத்தளத்தில் அவர் பகிர்ந்த காணொளியில் குறிப்பிட்டிருந்தார்.
திடீரென வாகனத்தில் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி விட்டு, திரும்பி பார்த்தபோது வாடிக்கையாளரில் ஒருவர் கால்ச்சட்டை அணியாமல் அமர்ந்திருக்கின்றார். அதை விட அதிர்ச்சி என்னவென்றால், அந்த வெளிநாட்டு ஆடவர், இருக்கையிலேயே மலம் கழித்துள்ளார்.
பொறுமை இழந்த அந்த ஓட்டுநர், அவ்விருவரையும் இருக்கையை தூய்மைப்படுத்த சொல்லி விட்டு பின்பு வாகனத்தை விட்டு வெளியேற்றியும் விட்டார். இந்த மாபெரும் சவாலைத் தொடர்ந்து, தனது அடுத்த கட்ட வேலைகளை அவர் இயல்பாக செய்ய தொடங்கினார் என்று சமூக ஊடகத்தில் அந்த ஓட்டுநர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் வாகனத்தில் ஏறும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் முடிந்த வரை தங்களின் சுய ஒழுங்கை கடைபிடிக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகின்றனர்.