
லண்டன், அக்டோபர்-26,
2028 அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிடக்கூடுமென, முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கோடி காட்டியுள்ளார்.
கடந்தாண்டு தேர்தலில் டோனல்ட் ட்ரம்பிடம் தோல்வி கண்ட பிறகு, பிரிட்டனின் BBC தொலைக்காட்சிக்கு அளித்த தனது முதல் நேர்காணலில், அந்த இந்திய வம்சாவளி பெண் தெரிவித்தார்.
“நான் இன்னும் முடிந்துவிடவில்லை” என்றும், தன்னை எதிர்கால அதிபராக பார்க்கும் வாய்ப்பு அமெரிக்கர்களுக்கு இன்னும் உண்டு என்றும், அண்மையில் 107 Days என்ற பெயரில் தனது தேர்தல் அனுபவங்களைப் புத்தகமாக வெளியிட்டவருமான கமலா குறிப்பிட்டார்.
அதிபருக்கான போட்டியில் தான் இல்லை என கருத்துக் கணிப்புகள் கூறுவது குறித்து கேட்டபோது, “நான் எப்போதுமே கருத்துக் கணிப்புகளை நம்புவதில்லை” என்றார் அவர்.
இவ்வேளையில் ட்ரம்பை “அரக்கன்” என கடுமையாகச் சாடிய கமலா, தாம் எதிர்பார்த்தது போலவே அவர் அரசு நிறுவனங்களை துஷ்பிரயோகம் செய்வதாகக் குற்றம் சாட்டினார்.
கடந்த தேர்தல் தோல்வி குறித்து பேசிய கமலா, ஜோ பைடன் போட்டியிலிருந்து விலகியபின் தாமதமாக பிரச்சாரம் தொடங்கியதால் வெற்றி பெற இயலவில்லை எனக் கூறினார்.
எனினும், ஒருநாள்
அமெரிக்க அதிபராக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்படுவார் என நம்பிக்கைத் தெரிவித்த 61 வயது கமலா ஹாரிஸ், அது தானாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் முதல் பெண் அதிபராகும் கமலாவின் கனவைக் கலைத்து, ட்ரம்ப் இரண்டாம் தவணையாக வெள்ளை மாளிகைக்குள் நுழைந்துள்ளார்.



